சர்வதேச அளவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க பரதநாட்டிய மகா நடன பயிற்சி உலக சாதனை நிகழ்வான “சங்கமம் 2026” இன் அங்குரார்ப்பண ஆரம்ப நிகழ்வை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தார்.
இலங்கையின் சங்கமம் லியா ஹொலிடேஸ் மற்றும் இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி ஆகிய நிறுவனங்கள் இணைந்து, தொன்மையும் பழமையும் வாய்ந்த தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பரதநாட்டிய கலையின் பெருமையும் , பாரம்பரியத்தையும் உலக அரங்கில் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் (Guinness World Records) இடம்பிடிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மகா பரதநாட்டிய நடன நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. இதில் சர்வதேச ரீதியாக 5000 இற்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ளனர்.




