இரண்டு மணிநேரம் ஒதுக்கி வீடுகளையும் சூழலையும் தூய்மைப்படுத்துங்கள் -மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கோரிக்கை

அனைவரும் இரண்டு மணிநேரம் ஒதுக்கி தமது வீடுகளையும் தமது சூழலையும் தூய்மைப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான நிலையினை உருவாக்கிகொள்ளமுடியும் என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்புகளை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டினை தூய்மைப்படுத்துவோம் என்னும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் 48கிராம சேவையாளர் பிரிவுக்குமான வேலைத்திட்டங்கள் இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகம்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,மட்டக்களப்பு மாநகரசபை,சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இதன் பிரதான நிகழ்வு கல்லடி நொச்சிமுனையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்,கிராம சேவையாளர்,பொதுச்சுகாதார பரிசோதகர்,மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட நொச்சிமுனைப்பகுதியில் உள்ள வீடுகளில் தூய்மைப்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான கழிவுப்பொருட்களை அகற்றும் செயற்பாடுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றதுடன் விழிப்புணர்வுசுகளும் வழங்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,

ஜனாதிபதியின் கிளீன் சிறிலாங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஒரு அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் அதற்கு தயாராக எமது சூழலை பேணவேண்டும் என்பதை நோக்காக கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

வழமையாக சமுர்த்தி திணைக்களத்திற்குட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுச்சிரமதானங்களை வழமையாக முன்னெடுத்துவருகின்றனர்.இன்றைய தினம் வழமைக்கு மாறாக ஒவ்வொரு வீடும் சுத்தமாக்கப்படவேண்டும்.வெள்ள நிலைமையினை அவதானிக்கின்றபோது வெள்ளத்திற்கு பின்னரான நிலைமை சூழல் மோசமாக இருக்கின்றபோது டெங்கு மற்றும் ஏனைய நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்குடன் இதனை முன்னெடுத்திருக்கின்றோம்.

ஒவ்வொரு வீட்டிற்கும் பைகள் வழங்கி தமது வீட்டின் சூழலை சுத்தப்படுத்துவதுடன் நீர்தேங்க கூடிய கொள்கல்களை அகற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.அகற்றப்படும் கழிவுகளை மாநகரசபைக்கு வழங்குவதற்கான திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.