மட்டக்களப்பில் முதல்முறையாக இடம்பெற்ற விவசாய ஆராய்ச்சி மாநாடு


கிழக்குப் பல்கலைக்கழகமும், விவசாயத்திணைக்களமும் இணைந்து நடாத்திய மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்முறையாக விவசாய ஆராய்ச்சி மாநாடு இன்று (18) சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்விசாய ஆராய்ச்சி மாநாட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாயபீட பீடாதிபதி திருமதி. புனிதா பிரேமானந்தராஜா மற்றும் விவசாய திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் ஆகியோர்களின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனூடாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விவசாயபீடத்தினால் மேற்கொள்ளப்படும் விவசாய ஆராய்ச்சிகள் மற்றும் அதன் முடிவுகள் பல்கலைக்கழக வளாகத்தோடு நின்று விடாமல் அவை விவசயாப் போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகளை நேரடியாக சென்றடையவேண்டும், விவசாயிகள் அதிக விளைச்சல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் வருடாந்தம் இம்மாநாடு நடாத்தப்படவுள்ளதாக விவசாய திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் பரமேஸ்வரன் கருத்துத் தெரிவித்தார்.

இதேவேளை மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் கருத்து வெளியிடுகையில் இம்மாவட்டத்தில் விவசாயம் சார் பிரச்சினைகள் எதிர்கொள்ளும்போது கள ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றுக்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வுகைளை முன்வைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி, உபவேந்தர், சிரேஸ்ட விரிவுரையாளர்களுக்கு நன்றி பாராட்டினார். மேலும் அனுபவம் மற்றும் திறமையுடைய எமது விவசாயிகளையும், சகல வளங்களையும் கொண்ட எமது மாவட்டத்தில் அமைச்சுக்கள், திணைக்களங்களுடாக கிடைக்கும் நிதிகளை முறையாக பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் தன்னிறைவு கொண்ட மாவட்டமாக திகழமுடியும் எனவும், நெல், மறுவயல் பயிர்கள் மற்றும் கல்நடை வளர்பிலும் சிறப்புத் தேர்ச்சி பெறமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இம்மாநாட்டின் திட்ட இணைப்பாளர் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர். ரீ. கிரிதரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கமநல திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே. ஜெகன்னாத், இத்திட்டத்திற்கு நிதிப்பங்களிப்பினை வழங்கும் கமர்சல் வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ஆர். கஜரூபன், அதன் அபிவிவிருத்தி கடன்பிரிவு முகாமையாளர் டபில்யூ. பீ.ரீ. லசந்த, கிழக்கப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், விவசாய திணைக்கள போதனாசிரியர்கள், விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.