மட்டக்களப்பில் ஆற்றுவாய் வெட்டப்பட்டு வெள்ள நீர் கடலுக்குள் செலுத்தப்பட்டது -மீனவர்கள் எதிர்ப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதான கடலுக்குள் வெள்ள நீர்வெளியேற்றம் செய்யும் பிரதான பகுதியான மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர்வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தாழ்நிலங்களில் உள்ள வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் படுவான்கரைப்பகுதிக்கு செல்லும் பிரதான பாலத்தின் ஊடாகவும் வெள்ளநீர் பாயும் நிலைமை காணப்படுகின்றது.

கோக்கட்டிச்சோலை பகுதிக்கு செல்லும் மண்முனைப்பாலம்,வவுணதீவு பிரதேசத்திற்கு செல்லும் வளையிறவு பாலம் ஆகியவற்றின் ஊடாக வெள்ளநீர் பாயும் நிலைமை காணப்பட்டது.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிகளவான வயல்கள் வெள்ளத்தினால் சூழப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் விவசாய அமைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இது தொடர்பில் நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலை தொடர்ந்து நேற்று மாலை முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்ற தீர்மானம் எடுக்கப்பட்டு அது தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இந்த நிலையில் இன்றைய தினம் முழுமையாக முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை பார்வையிடுவதற்காக பெருமளவான பொதுமக்கள்ள அப்பகுதிக்கு படையெடுப்பதை காணமுடிகின்றது.

முகத்துவாரத்தினை அண்மித்த பகுதிகளில் பெருமளவான மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதையும் காணமுடிகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டும் செயற்பாட்டுக்கு பிரதேசத்தில் உள்ள மீனவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.