மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூரின் கந்த சஸ்டி விரதம் ஆரம்பம்


முருகப்பெருமானின் தனிப்பெரும் விரதமாகவும் அதிகளவில் இந்துக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதமாகவும் உள்ள கந்த சஸ்டி விரதம் இன்று ஆரம்பமானது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று கந்தசஸ்டி விரதம் வெகுவிமர்சையாக ஆரம்பமானதுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள் இன்றிலிருந்து விரதம் அனுஸ்டிக்கின்றனர்.
ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று கந்தசஸ்டி விரதம் ஆரம்பமானது.
இன்று காலை ஆலயத்தில் விசேட யாக பூஜை,அபிசேக பூஜை நடைபெற்றதை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்று கந்தசஸ்டியை முன்னிட்டு வைக்கப்பட்ட கும்பத்திற்கு அடியார்கள் பூயிட்டு வழிபடும் நிகழ்வு நடைபெற்றது.
கந்த சஷ்டி விரதம், முருகப் பெருமானின் சூரசம்ஹாரத்தை நினைவுகூரும் மிக முக்கியமான விரதமாகும். ஐப்பசி மாத சுக்லபட்ச பிரதமை தொடங்கி சஷ்டி வரையிலான ஆறு நாட்கள், பக்தர்கள் கடுமையான உண்ணாவிரதம் கடைப்பிடித்து, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, தீபாராதனைச் செய்கின்றனர்.
இன்றைய தினம் ஆயிரக்கணக்கான அடியார்கள் விரத ஆரம்ப பூஜையில் கலந்துகொண்டதுடன் ஆறாம் நாளான திங்கட்கிழமை சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் மறுநாள் விரதம் நிறைவுபெறும்.