எங்களை ஊக்குவித்தவர்கள் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு வேடிக்கை-அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்


ஒரு மாற்றத்தை எதிர்நோக்கியே இந்த அரசாங்கத்தை நாங்களும் வாக்களித்து கொண்டு வந்திருந்தோம். இந்த அரசாங்க கடந்தகாலத்தில் தாங்கள் ஆட்சியில் இல்லாத போது எமது பிரச்சனைக்கு அவர்களும் ஆதரவு வழங்கி எங்களுடன் இணைந்து கல்வி அமைச்சின் முன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எங்களை ஊக்குவித்தவர்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு வேடிக்கையானதாக இருக்கின்றது என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு ஆசிரியர்களாகக்  கடமைபுரியும் பட்டதாரிகளுக்கு இதற்கு முன்பிருந்த அரசாங்களும் அநீதியை ஏற்படுத்தி இருந்தன. ஆனாலும் அவை ஒரு சில தீர்வுகளைத் தருவதற்கு முயற்சிகள் எடுத்திருந்தன. ஆனால் தற்போதைய அரசாங்க காலத்தில் நாங்கள் பாரிய அநீதிகளுக்கு உள்வாங்கப்பட்டிருக்கின்றோம். நாங்க பல போராட்டங்கள், பல கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் இதுவரைக்கும் இந்த அரசாங்கம் எமது விடயத்தில் தீர்வை எட்டும் என்ற நம்பிக்கையும் எமக்கு இல்லை. எமக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடும் இந்த அரசாங்கத்திடம் இல்லை.
எங்களுடைய பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் மட்டுமல்ல பலரும் சொல்லுகின்ற விடயம் ஆசிரியர் சேவை பிரமானக் கோவையில் சொல்லப்படுகின்ற விடயங்களை எங்கள் விடயத்திலும் உள்வாங்க முனைகின்றார்கள்.
பட்டதாரிகளாக இருந்தால், வேறு திணைக்களங்களில் இருக்கும் பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு போட்டிப் பரீட்சை வைத்து உள்வாங்க வேண்டும் என்று ஆசிரியர் சேவைப் பிரமானக் கோவை சொல்லுகின்றது.
அரசாங்கமும் அந்த அடிப்படையில் தான் செய்வோம் என்று குறிப்பிடுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்த பலரின் நிலைப்பாடுகளும் அதுவாகத்தான் இருக்கின்றது. ஆனால் நாங்கள் கேட்பது என்னவென்றால் அரசாங்கம் சொல்வது போல் ஆசிரியர் சேவை பிரமானக் கோவை பின்பற்றுவதாக இருந்தால் கடந்த மாதம் தென் மாகாணத்தில் பட்டதாரிகளுக்குரிய ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. எந்தவித போட்டிப் பரீட்சையும் இல்லை, நேர்முகத் தேர்வும் இல்லை, வெறுமனே அவர்களது கோவைகளைப் பரிசீலித்தே அந்த நியமனம் வழங்கப்பட்டது. இவர்களும் பட்டதாரிகள் தான், தென்மாகாணமும் இலங்கையில் தான் இருக்கின்றது. அவ்வாறு தென்மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படுகின்ற போது ஆசிரியர் சேவை பிரமானக் கோவை பார்க்கப்படவில்லை ஆனால் பாடசாலையில் இணைக்கப்பட்டு ஐந்து வருடங்களாக ஆசிரியர் பணியை ஆற்றிவருகின்ற இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் போதுதான் சேவைப் பிரமான கோவை பார்க்கின்றார்கள். இது எவ்வாறான கண்கட்டி வித்தை என்று எங்களுக்குத் தெரியவில்லை.
ஒரு மாற்றத்தை எதிர்நோக்கியே இந்த அரசாங்கத்தை நாங்களும் வாக்களித்து கொண்டு வந்திருந்தோம். இந்த அரசாங்க கடந்தகாலத்தில் தாங்கள் ஆட்சியில் இல்லாத போது எமது பிரச்சனைக்கு அவர்களும் ஆதரவு வழங்கி எங்களுடன் இணைந்து கல்வி அமைச்சின் முன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எங்களை ஊக்குவித்தவர்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு வேடிக்கையானதாக இருக்கின்றது.
பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த ஐந்து வருடங்களாக பல இன்னல்களைத் தாண்டி பல போராட்டங்களுக்கு மத்தியில் புரிந்து வந்திருக்கின்றார்கள். இப்போது போட்டிப் பரீட்சை என்பதைக் கையில் எடுத்தால் அவர்கள் இந்த ஐந்து வருடங்களும் பல போராட்டங்களின் மத்தியில் ஆற்றிவந்த பணிக்கு யார் பொறுப்புக் கூறுவது? இந்த ஐந்து வருடங்கள் எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தூக்கிப்பிடித்தவர்கள் நாங்கள்.
போட்டிப் பரீட்சை என்பது ஒரு தெரிவுநிலையை இலகுபடுத்துவதற்கான வழிமுறையே தவிர இதன் மூலம் ஒரு திறமையான ஆசிரியரைத் தெரிவு செய்வதென்பதல்ல. இது இந்த அரசாங்கத்திற்குத் தெரியும். எங்களது தெரிவுமுறை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இடம்பெற்றே அவர்கள் பாடசாலைக்கு இணைக்கப்பட்டிருந்தார்கள். தற்போது போட்டிப் பரீட்சை என்றால் இந்த ஐந்து வருடத்திற்கும் யார் பொறுப்புச் சொல்வது.
இந்த நியமனங்கள் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டமையால் இதனை ஒரு அரசியல் பழிவாங்களாக மேற்கொள்கின்றார்கள் என்று எண்ணுகின்றோம். தற்போது நாட்டில் பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன, ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.
எமது பிரச்சனை தொடர்பில் கடந்த 08ம் திகதி தொடக்கம் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம். ஆனால் இதுவரைக்கும் அரசாங்கம் வாய் திறக்கவில்லை. எமது இந்த ஒரு பிரச்சனைக்கே தீர்வு காண முடியாத அரசாங்கம். நாட்டில் நிலவும் பல பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும். ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஏற்றவாறே சட்டங்கள் இயற்றப்படும் என்று சொல்லி இருக்கின்றார். நாங்களும் இந்த நாட்டுப் பிரஜைகள் தான். எங்கள் பிரச்சனை நாட்டின் ஜனாதிபதிக்குத் தெரியவில்லையா? எங்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு தரவேண்டியவர்கள் ஜனாதிபதியும், பிரதமரும் தானே தவிர கட்சியில் இருக்கும் ஏனையவர்கள் அல்ல. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் ஒரு விசேட வர்த்தமானியூடாக எமது பிரச்சனையைத் தீர்க்க முடியும். நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றக்குறையும் அனைவருக்கும் தெரியும். இவற்றிற்குக் கையிலே தீர்வை வைத்துக் கொண்டு தீர்வில்லாமல் காட்ட நினைப்பது இந்த அரசாங்கத்தின் மாயைகளில் ஒன்று.
எனவே எங்களுக்குரிய தீர்வினை நோக்கி இம்மாத இறுதியில் நாங்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பட்டமொன்றை முன்னெடுப்பதுடன் அன்றிலிருந்து எமக்குத் தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தினையும் ஆரம்பிப்பதற்கு எண்ணியுள்ளோம்.
உலகத்திலே எங்குமில்லாதவாறு இங்கு பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அநீதிகளுக்கும், அவமானங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். கல்விப் புலத்தில் இருக்கும் சிலரின் பார்வை அப்படித் தான் இருக்கின்றது. ஆசிரியர் சேவையில் கற்பித்தல் மட்டுமின்றி பல விடயங்களைச் சொல்லிக் கொடுக்கின்ற சேவை அது. ஆனால் அங்கு இருப்பவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றமையை எவ்வாறு எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை.
எமது ஐந்து வருட சேவையினைக் கருத்திற்கொண்டு வயதெல்லையினை மாற்றிக் கொடுத்திருக்கின்றோம் என்று அரசாங்கம் கூறுகின்றது. இந்த விடயம் 10 நாட்கள் பட்டினி இருந்தவனுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு பசியைத் தீர்த்துவிட்டோம் என்று கூறுவது போன்றதான ஒரு செயலாகும்.
நாங்கள் நாடாளாவிய ரீதியில் ஒன்றிணைந்த பட்டதாரிகள், பட்டதாரிகள் ஒன்றிணைந்தால் நாட்டில் என்னவாகும் என்பது கடந்த அரசாங்கங்களுக்கு நடந்த நிகழ்வுகள் ஒரு தக்க சான்று. அதே போன்றுதான் எங்களுடைய பிரச்சனைக்குச் சரியான ஒரு தீர்வு கிடைக்கப்படாவிடின் எந்தவொரு இடத்திற்கும், எந்தவொரு வழிமுறைக்கும் இறங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.