போரதீவுப்பற்று பிரதேசம் கடந்த காலத்தில் தொல்பொருள்,அத்துமீறிய குடியேற்றங்களினால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் அவற்றினை தடுத்து நிறுத்தி மண்ணை பாதுகாக்கவேண்டுமானால் தமிழ் தேசிய அரசியலே அதற்கான அடித்தளமாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு கோவில்போரதீவு வட்டார வேட்பாளராக போட்டியிடும் மகேஸ்பரன் கோபிநாத் தெரிவித்தார்.
கோவில்போரதீவில் இன்று (03)நடைபெற்ற இறுதி தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு கருதுத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த அவர்,|
போரதீவு பற்று பிரதேசம் அன்று முதல் இன்று வரை பல அடக்கு முறைக்கு ஆளாகிய பிரதேசம். அது மாத்திரமல்ல பல திட்டமிட்ட குடியேற்றும் இன்றுவரை படிப்படியாக நடைபெற்ற வண்ணம் உள்ளன. அத்தோடு தொல்லியல் எனும் போர்வையில் பல புராதன வரலாற்று சின்னங்கள் எல்லை கல் இடப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வரும் பிரதேசமாகவுள்ளதுடன் அப்பாவி கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மேய்ச்சல் செய்ய ஒதுக்கப்பட்ட திமிலாணை குளத்தை அண்டிய பகுதியில் மேய்ச்சல் தரையாக பயன்படுத்தமுடியாத பல இன்னல்களை அனுபவித்துவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் மக்களாகிய நாங்கள் எமதுபிரதேசத்தின் நிலைமையினை உணர்ந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அன்று முதல் இன்று வரை தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் துரோக தனமான செயல்பாடுகளுக்கு எதிராக களத்தில் நின்று குரல் கொடுக்கும் கட்சியாக இலங்கை தமிழரசுக்கட்சி மட்டுமே உள்ளது.
தன்மான தமிழனின் தாய் கட்சியான வீட்டு சின்னத்திற்கு நேராக நீங்கள் உணர்வு பூர்வமாக இடும் அடையாளமானது எமது பிரதேசம் மாத்திரம் இன்றி ஒட்டு மொத்த வடகிழக்கு நிலப்பரப்புடன் கூடிய எமது வளம் நிலம் மொழி கலை கலாச்சார வாழ்வியல் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு அடுத்த இளம் தலைமுறைக்கு சரியான உரிமையுடன் கூடிய அபிவிருத்தி கொண்டுசெல்லும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.