எதிர்வரும் மே 06ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த 19ம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுற்றிருக்கின்றன.
இதில் மொத்தமாக கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 139 கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருப்பினும் 118 வேட்புமனுக்கள் மாத்திரமே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 17 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 101 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இதில் கோறளைப்பற்று பிரதேச சபையில் சர்வஜன அதிகாரம் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையில் விநாயகமூர்த்தி விஜயராசா தலைமையிலான சுயேற்சைக்குழு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியில் அப்துல் வகாப் முகம்மது உசைர் என்பவரின் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் நகரசபையில் 11 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன இதில் 10 கட்சிகளும் 01 சுயேற்சைக்குழுவும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தன. இதில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் மொத்தமாக 07 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் 02 சுயேட்சைக்குழுக்களுமாக 09 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதிலும் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. போரதீவுப் பற்றுப் பிரதேச சபைப் பிரிவில் 05 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மாத்திரம் போட்டியிட்டிருந்தன. அதில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சிவநேசராசா ஒளிர்வளசுதன் மற்றும் அரசரெத்தினம் சப்தசவகீத் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபைக்காக 09 அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளும், 01 சுயேட்சைக்குழுவுமாக 10 வேட்புமனுக்கள் தாக்கல் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், சிறிலங்கா தொழிலாளர் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் கருணாநிதி தன்சிக்கா என்பவருடைய வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மண்முனைப்பற்று பிரதேச சபைக்காக 11 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், 07 சுயேட்சைக்குழுக்களுமாக 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் சிறிலங்க முஸ்லீம் காங்கிரஸ். சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் தலைமையிலான சுயேட்சைக்குழு, கிருஸ்ணபிள்ளை நிஜானன் தலைமையிலான சுயேட்சைக்குழு, செல்லத்துரை தங்கவேல் தலைமையிலான சுயேட்சைக்குழு, சிறிலங்கா தொழிலாளர் கட்சி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராக்ரிக்கப்பட்டுள்ளதுடன், நல்லதம்பி சுரேந்திரன் தலைமையிலான சுயேட்சைக் குழுவில் திலகநிதி சுரேந்திரன், குணசுந்தரம் திவாகர் மற்றும் வடிவேல் பவளகொடி ஆகிய மூவரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
கோறளைப்பற்று பிரதேச சபைக்காக 08 அங்கீகரிக்கப்பட்ட அரசியற்கட்சிகளும் 03 சுயேட்சைக் குழுக்களுமாக 11 கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்தன. இதில் விமலசேன லவக்குமார் தலைமையிலான சுயேட்சைக்குழு மற்றும் குணரெத்தினம் பிலேந்திரன் தலைமையிலான சுயேட்சைக்குழு ஆகியனவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் செல்லத்தம்பி விமல்ராஜ் என்பவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் மொத்தமாக 10 அங்கிகரிக்கப்பட்ட அரசியற்கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன. இதில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
காத்தான்குடி நகரசபையில் 07 அரசியற் கட்சிகளும், 03 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன. இதில் சர்வஜன அதிகாரம் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மண்முனை மேற்கு பிரதேச சபைக்காக 07 அரசியற்கட்சிகள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன. இதில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைக்காக 05 அரசியற்கட்சிகளும், 01 சுயேட்சைக் குழுவும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 455520 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றார்கள். 444 வாக்களிப்பு நிலையங்களில் இந்த வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. 12 உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்யப்பட இருப்பதுடன் மொத்தமாக மாவட்டத்தில் இருந்து 274 பேர் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்கள்.