மட்டக்களப்பு மாவட்டத்தில் 118வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 17வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 101 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஷ்ரீனா முரளிதரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
வேட்புமனுக்கள் கையளிக்கும் இறுதி நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மாவட்ட அரசாங்க அதிபரும்,தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே.முரளீதரனிடம் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் இராஜஙாக் அமைச்சர்களான சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல்செய்தனர்.
இதேபோன்று ஆளும் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையிலும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமையிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.நளீம் தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
இதேபோன்று ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல்செய்யப்பட்டன.
அத்துடன் ஈபிடிபியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தலைமையில் வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டதுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் 11உள்ளுராட்சிமன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ஜக்கிய தேசிய கட்சி சார்பில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மெனலானா தலைமையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேநேரம் இன்றைய தினம் மாலை வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யும் பணிகள் பூர்த்தியானதன் பின்னர் நடைபெற்ற விசேட கூட்டத்தினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடாத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,
உள்ளூராட்சி அதிகார சபைகளின் தேர்தல் ஆனது மே மாதம் ஆறாம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அவர்கள் அறிய தந்துள்ளார்கள்.
இந்த உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் மற்றும் 9 பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
அதில் அரசியல் கட்சிகளில் இருந்து 19 கட்சிகளும் சுயேட்சை குழுவில் இருந்து 25ம் ஆக 139 பேர் கட்டு பணத்தை செலுத்தி இருந்தனர் மார்ச் மாதம் 17ம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரைக்கும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 144 வட்டாரங்களில் 146 உறுப்பினர்கள் உள்ளடங்களாக 274 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இந்த தேர்தல் ஆனது இடம்பெறவுள்ளது.
இவற்றில் இன்றைய தினம் வரைக்கும் 118 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது இவற்றில் 17 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 101 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.