அதிகூடிய வாக்கில் தெரிவான சாணக்கியன் -நான்கு தமிழ் பிரதிநிதித்துவம் மட்டக்களப்பு மாவட்டத்தில்


பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் அவர்கள் 65ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று அதிகூடிய வாக்குப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஒருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் சார்பாக ஒருவரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பாக மூவருமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பேர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் தேர்தல்கள்
திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 96,975 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தினையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 31,286 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 22,570 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 14,540 வாக்குகளையும் பெற்றுள்ளது.

பெற்றுக் கொண்டுள்ள விருப்பு வாக்குகளின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இரா.சாணக்கியன் (65,458 வாக்குகள்), ஞா.சிறிநேசன் (22773 வாக்குகள்), இ.ஸ்ரீநாத், (21202 வாக்குகள்) ஆகியோரும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட  கந்தசாமி பிரபுவும் (14856 வாக்குகள்), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஹ் (32410 வாக்குகள்)  பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் மட்டக்களப்பு பிரதான வாக்கெண்ணும் நிலையத்தில் ஆதரவாளர்கள் மகிழ்ச்சிஆரவாரம் செய்து வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.