பாசிக்குடா கடற்கரையில் பொலிஸார் மீது தாக்குதல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா கடற்கரை பகுதியில் மதுபோதையில் கடலில் நீராடச் சென்றவர்களை தடுத்த பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன தாக்குதலை மேற்கொண்ட ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று (12) மாலையில் இடம்பெற்றுள்ளது.பொலன்னறுவை செவனபிட்டியாவைச் சேர்ந்த சுற்றுலா குழுவினர், சம்பவதினமான நேற்று பகல் சுற்றுலா பயணம் மேற்கொண்டு பாசிக்குடா கடற்கரைக்கு சென்று அங்கு மதுபானம் அருந்தியுள்ளனர்.

பின்னர் கடலில் நீராட முயற்சித்தபோது அங்கு கடமையில் இருந்த பொலிஸார் மதுபோதையில் நீராடகூடாது என்பதை அவர்களிடம் கூறியுள்ளனர்.

இதன்போது மதுபோதையில் இருந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்ட ஆண் ஒருவரை கைது செய்துள்ளனர்.இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.