தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதன் பின்னர் தெற்கில் உள்ள பிரதான வேட்பாளர்கள் தெற்கில் பிரசாரங்களை முன்னெடுக்காமல் வடகிழக்கில் முகாமிட்டுவருவதாகவும் தமிழ் மக்கள் திரட்சி கண்டு அவர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவந்த நமக்காக நாம் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இன்றைய தினம் நமக்காக நாம் பிரசாரப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்கள் சகிதம் இந்த பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதில் பெருமளவான தமிழரசுக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
தமிழரசுக்கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் மா.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டு தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
இதேநேரம் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் உள்ள சத்துருக்கொண்டான் படுகொலை ஞாபகார்த்த தூபியில் அஞ்சலி செலுத்திய வேட்பாளர் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சிலை மற்றும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி ஆகியவற்றிலும் நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் நினைவுத்தூபியிலும் அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த பொதுவேட்பாளர் அரியநேத்திரன்,
இந்த தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் வெற்றிபெறவேண்டும் என்று வடகிழக்கில் மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
தென்பகுதியிலிருக்கு தென்பகுதி வேட்பாளர்கள் அங்கு பிரசாரம் செய்வதை காணமுடியவில்லை.அவர்கள் இப்போது வடகிழக்கில் முகாமிட்டுள்ளனர் என்றால் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் அவர்களுக்கு ஒரு அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.தமிழ் மக்கள் திரட்சியாக ஒற்றுமையாக இருக்கின்றார்கள்.அவர்களை நாங்கள் இனி சிதறடிக்கமுடியாது என்று என்னை வேட்பாளராக நிறுத்திய பின்னர் அவர்கள் அச்சமடைகின்றார்கள்.