பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியர்கள் திடீர் என நடாத்திய போராட்டம் -நிர்வாக அத்துமீறலா?


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் இன்று பிற்பகல் பாடசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளரினால் ஆசிரியர் இடமாற்றத்தின்போது பிழையான வகையான செயற்பாடுகள் முன்னெடுப்பதாக கூறி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய அரசாங்கத்தின் கீழ் தேசிய பாடசாலைகள் இயங்கும் நிலையில் மாகாணசபையின் கீழ் இயங்கும் நிர்வாகங்கள் இடமாற்றங்களை மேற்கொள்ளும் செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீதியற்ற முறையில் இடம்பெற்றுவருகின்ற ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக இன்று பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் இந்த கவனயீர்ப்பு போராட்டம் பாடசாலையில் முன்பாக இடம்பெற்றது.
தாங்கள் தேசிய பாடசாலையின் கீழ் நியமனம்பெற்றுள்ள நிலையில் தங்களுக்கு இடமாற்றங்கள் வழங்கவேண்டுமானால் இன்னுமொரு தேசிய பாடசாலைக்கே இடமாற்றம் வழங்கவேண்டும் என்றும் மாறாக மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்வதை அனுமதிக்கமுடியாது எனவும் ஆசிரியர்கள் இதன்போது தெரிவித்தனர்.
மேலதிக ஆளணிகள் இருக்குமானால் அவர்களை மேலுமொரு தேசிய பாடசாலைக்கே இடமாற்றம் செய்யவேண்டும் எனவும் மாறாக வலய கல்விப்பணிப்பாளர் எழுந்தமானமாக இடமாற்றங்களை செய்வதை அனுமதிக்கமுடியாது எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
வலய கல்விப்பணிப்பாளரே நீதியற்ற நிர்வாக தலையீட்டினை பாடசாலையின் மீது திணிக்காதே,300மாணவர்களைக்கொண்ட பாடசாலையும் 3000பிள்ளைகளைக்கொண்ட பாடசாலையும் சமனா?,பாடசாலையின் நிர்வாகத்தில் தலையிடாதே போன்ற பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.