மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


2016ம் ஆண்டு முதல் நிர்ணயிக்கப்பட்ட 15 வீத ஊதிய அதிகரிப்பு இன்னும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சார ஊழியர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விடயம் தொடர்பில் சம்பள அதிகரிப்பினை மேற்கொள்ளுமாறு உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பவற்றை வலியுறுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக கிழக்குப் பலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் ஏகாம்பரம் ஜெகராஜ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
உத்தேசிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளு, வரிக்கே செல்லுகின்றது கிடைக்கும் சம்பளம், 15வீத சம்பள அதிகரிப்பை உடனே நிறைவேற்று போன்ற வாசகங்களை ஏந்தியும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கோரிக்கைகள் பூர்த்திசெய்யப்படாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.