மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் இலவச சுகாதார சேவையினை பாதுகாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று நண்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வைத்தியர்களுக்கான பொருளாதார நியாயத்தை ஏற்படுத்துவோம்,இலவச சுகாதார சேவையை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மருத்துவர்களின் போக்குவரத்து இதர கொடுப்பனவினை புதுப்பிக்கவும்,பணித்திறன் அடிப்படையில் வைத்தியர்களின் சம்பளத்தை உயர்த்தவேண்டும்,இலவச வைத்திய சேவையினை முடக்காதே,அடிப்படை மருந்துகள்,உபகரணங்களை உறுதிப்படுத்து,திறமையற்ற சுகாதார நிர்வாகிகள்,வைத்திய தொழில் உரிமைகளில் கைவைக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்ட வைத்தியர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போத சுமார் ஒரு மணி நேரம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியர்கள் தமது கடமைக்கு சென்றனர்.
வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 60வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டாக்டர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார்.
இலவச சுகாதார சேவையினை பாதுகாப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.நாட்டைவிட்டு வைத்தியர்கள் வெளியேறுதல்,மருந்துகொள்வனவில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள் காரணமாக இலவச மருத்துசேவையானது முடக்கநிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.இதற்கு தீர்வாக ஆறு தீர்வினை ஆறு மாதங்களுக்கு முன்னர் அரசுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வழங்கியிருந்தது.அதற்காக பல்வேறு அழுத்தங்களையும் அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தது.
ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் உறுதியான நடவடிக்கையினை எடுக்காத நிலையில் இலங்கை அரசாங்கம் மாகாணம் தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது.என்றார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய ஐந்து வைத்திய நிபுணர்கள் வெளியேறியுள்ளதுடன் 20வைத்தியர்கள் வெளியேறியுள்ளதுடன் பாரிய நெருக்கடியை போதனா வைத்தியசாலை எதிர்கொண்டுவருவதாக போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.மதனழகன் தெரிவித்தார்.








