கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை ஜுன் 12ஆம் திகதி திறக்கப்பட்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி மூடப்படும்

 

வி.சுகிர்தகுமார் 

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை ஜுன் 12ஆம் திகதி திறக்கப்பட்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி மூடப்படும் என அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ. டக்ளஸ் தெரிவித்தார்.

யாத்திரை தொடர்பாக உகந்தை முருகன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற சமயத்தலைவர்கள் அரச திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்
இதேநேரம் இவ்வருடம் சுமார் 45000 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டது.
கடந்த வருடம் 35000 பாதயாத்திரிகர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க் கப்பட்ட நிலையில் 28838 பாதயாத்திரிகர்கள் கலந்து கொண்டனர்.

ஆயினும் எரிபொருள் விலைகுறைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி ஓரளவு தணிந்துள்ளமை காரணமாக அதிகளவான பாதயாத்திரிகள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

பொலித்தீன் பாவனை மற்றும் சிறிய தண்ணீர்போத்தல்களை கொண்டு செல்வதை தடை செய்துள்ளதாகவும் கருத்துரைக்கப்பட்டது.
மேலும் சிறுவர் தொடக்கம் முதியவர்கள் வரை ஆண்;கள் பெண்கள் என அனைவரும் கலாசார ஆடையுடன் மாத்திரம் யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
 
 லாகுல பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா தலைமையில் ஆலய வண்ணக்கர் எம்.டி.சுதுநிலமே பங்களிப்போடு இடம்பெற்ற இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ. டக்ளஸ் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் லாகுகல பிரதேச செயலக அதிகாரிகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பாணமை விகாராதிபதி ஆலய பிரதமகுரு சிவஸ்ரீP.க.கு.சீதாராம குருக்கள் உதவிக்குரு சிவஸ்ரீ ஆ.கோபிநாத் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம குருக்கள் நடாத்தி வைத்தார். இதில் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னராக ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதன் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கதிர்காம பாதயாத்திரைக்கான குமண ஊடான காட்டுவழிப்பாதை ஜுன் 12ஆம் திகதி காலை உகந்தை முருகன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜையை தொடர்ந்து 7 மணியளவில் திறக்கப்பட்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி மூடப்படும் எனவும் இக்காலத்தில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்படும் பாதை பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும் எனவும் குறிப்பிட்டனர்.

அதுபோல் பாதயாத்திரிகர்களுக்கான பாதுகாப்பு சுகாதார சேவைகள்  குடிநீர் வசதி போன்றவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றனர்.
குடிநீரை வழங்க லாகுகல பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் சிவதொண்டர் அமைப்பு மற்றும்  தம்பிலுவில்; சைவநெறி கூடம் மற்றும் சேவற்கொடியோன் உள்ளிட்ட அமைப்புக்களும்; பொறுப்பேற்றனர்.

மேலும் பாதயாத்திரிகர்கள் சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டனர்.