"தேனகபோசா" உத்தியோகபூர்வமாக மட்டக்களப்பில் அறிமுகம்!!


மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சத்துமா வழங்கும் திட்டம் நேற்று (20) சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் பங்குபற்றலுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கர்ப்பிணித்தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்டோரிற்கு இதன்போது சத்துமா வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால சிறார்களின் சிறப்பான புத்திக்கூர்மையையும் சிறந்த கல்வி அடைவு மட்டத்தையும் எதிர்பார்த்தே குறித்த போசாக்கு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் இதன் போது தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை அதிகளவில் கொண்டிருப்பதனால் போசாக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது.

சமூக பொருளாதாதார காரணங்கள், கல்வியறிவு நிலை என பல காரணங்களை வென்று போசாக்கான சமூகமாக மாற வேண்டிய தேவையை உணந்துள்ளதுடன், கடந்த ஒரு வருடகாலமாக இலங்கையில் ஏற்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவு காரணமாக கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் நிறை குறைந்த சிறுவர்களுக்கும் அரசினால் வழங்கப்பட்டுவந்த திரிப்போசா உணவை கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் நிறுத்தியதை தொடர்ந்து மட்டக்களப்பில் உள்ள சுகாதார வைத்தியதிகாரிகள் பிரிவில் உள்ள கிளினிக்குகளில் மாதாந்தம் எடுக்கப்படும் சுட்டிகளில் பாரிய பாதிப்பை காட்டத்தொடங்கியதுடன் மந்தபோசனை இரண்டு மடங்கை நோக்கி உயரத்தொடங்கியதுடன்,

கர்ப்பணியாக இருக்கும் போதும் சிறுவர்கள் ஐந்து வயது வரையுந்தான் குழந்தை முதல் சிறுவர்களின் மூளை வளர்ச்சி 95% இருக்கும். போசாக்கு குறைவு அவர்களின் ஒட்டுமொத்த புத்திக்கூர்மையையும் அழித்துவிடும்.

இப்படியே விட்டால் எமது ஒரு பரம்பரையே பாதிக்கப்பட்டுவிடுமென சிந்தித்ததன் விளைவில் உருவானதுதான் இந்த "தேனகபோசா" திட்டம் என்றால் அது மிகையாகாது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கர்ப்பிணித்தாய்மாருக்கும் போசனை குறைந்த சிறார்களுக்கும் வழங்குவதற்கான திட்டத்தினை மட்டக்களப்பு பிராந்திய சுதாதார பணிமனை முன்னெடுக்க திட்டமிட்டு செயற்பட்டு வருவதுடன், வாகரை தொடக்கம் களுவாஞ்சிகுடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி என ஒட்டுமொத்த மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் வழங்க முயற்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதென தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் வைத்தியகலாநிதி கடம்பநாதன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் மேலும் பல சுகாதார சேவைகள் உத்தியாகத்தர்கள் என மேலும் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.