களுவாஞ்சிகுடியில் பெற்றோல் செட் ஊழியர்களினால் தாக்கப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்

மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் நேற்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்,

மேற்படி சம்பவத்தில் மகிழூர்   வட்டார உறுப்பினர் கணபதிப்பிள்ளை உத்தமன் என்பவரே    காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக.பிரதேச சபை உறுப்பினர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்.

நான் ஒரு கடை வைத்து நடாத்தி வருகின்றேன். அதன் நிமிர்த்தம் கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்து. திரும்பி வரும் போது பெற்றோல்  போதாமை காரணமாக நிரப்புவதற்கா பெற்றோல்  நிலையம் சென்றேன். 

இதன்போது எனது   மோட்டார் சைக்கிளுக்கு ஞசு முறையின்   பிரகாரம் பெற்ரோல் நிரப்ப முடியும் என ஊழியர்கள் தெரிவித்தனர். மறுகணம் எனக்கு முன்  நின்றவருக்கு எந்தவிதமான குறியீடுகளையும் பரிசோதிக்காது  ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி விட்டு  நான்காயிரம் ரூபாய்க்கு பெற்ரோல் அடித்து கொடுத்தனர். 

இச் செயற்பாட்டினை பொறுக்க முடியாமல் அவர்களிடம் கேட்டேன். இதனை எனது தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளேன் இச் செயற்பாடு சட்டவிரோதமானது என தெரிவித்த வேளை   உடனடியாக. அங்கு கடமையாற்றிய ஐந்து  ஊழியர்களும் எனது  சட்டை பையில்  இருந்த தொலைபேசியையும் பணத்தையும் பறித்து என் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதன் பின்னர் நான் வைத்தியசாலையில் வந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என அவர் இதன்போது தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.