மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மூன்றாவது தடவையாக இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு 4000 லிட்டர் டீசல் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக வேளான் அறுடை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மு.செல்வராசாவினால் இந்த டீசல் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பொறுப்பான துறைசார் அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் முன்னுரிமையடிப்படையில் வாழைச்சேனை கமநல கேந்திர நிலையம், கிரான் கமநல கேந்திர நிலையம், மண்டபத்தடி கமநல கேந்திர நிலையம் அடங்கலான மூன்று ஏபிசிகளில் 4 கண்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு டீசல் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக மட்டக்களப்பு நகரிலுள்ள ஐ.ஓ.சி உரிமையாளர் தேசபந்து எம்.செல்வராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர் ஏற்கனவே இரண்டு தடவைகளில் விவசாயிகளுக்கு முன்னுரிமையடிப்படையில் 3500 லீற்றர் டீசலினையும், 50 விவசாயிகளுக்கான பெற்றோலினையும் வழங்கியிருந்ததுடன், மாவட்ட விவசாயிகளிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது.
நாடு பூராகவும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் அனைத்து தரப்பினரும் பாரிய இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையமானது தொடர்ச்சியாக ஒரு வார காலமாக நாளாந்தம் எரிபொருளை வழங்கிவருகின்றது.
இன்றைய தினம் அத்தியாவசிய சேவையீடுபடும் வாகனங்களுக்கும் இதன்போது எரிபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.