மட்டக்களப்பும் மாரியம்மன் சடங்கு வழிபாடும்(கட்டுரை)


(து.கௌரீஸ்வரன்)

மட்டக்களப்பு வாழ் மக்களின் பண்பாட்டு அசைவியக்கத்தில் வருடாந்தம் நடைபெற்று வரும் மாரியம்மன் சடங்கு விழாக்கள் பெருந் தாக்கஞ் செலுத்துவதாக இருந்து வருகின்றன.

மிகப்பெரும்பாலும் மாரியம்மன் வழிபாடு மட்டக்களப்புத் தேசத்தின் தேசிய விழாவைப் போன்று நடைபெற்று வருவதனைக் காண முடியும். வருடாந்தம் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தைத் திருக்குளிர்த்தி நாளாகக் கருதி மட்டக்களப்பிலுள்ள பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் சடங்கு விழா நடைபெற்று வருவதனைப் பார்க்க முடியும்.
மாரியம்மன் வளத்தின் தெய்வம் வளமான வாழ்வு வேண்டி வருடாந்தம் மட்டக்களப்பு மக்கள் மாரிக்கு விழா எடுத்து வருகின்றார்கள். மாரியம்மனுடன் தொடர்புடைய ஏழு கன்னிமாராக ஏழு சிறுமிகளையும் காத்தானாகச் சிறுவன் ஒருவனையுந் தேர்ந்தெடுத்து சடங்கு நாட்களில் பக்திசிரத்தையுடன் வழிபாடியற்றி நிறைவு நாளன்று அவர்களுக்குச் சர்க்கரையமுது படைத்து அவர்களின் திருப்தியைக் கேட்டறிந்து அவர்களிடம் மடிப்பிச்சை வாங்கியுண்டு வளமான வாழ்வியலுக்கான மனநலம் பெற்றுக் கொள்கின்றார்கள்.
சடங்கு நாட்களில் தலைமைப் பூசகர் வேப்பிலையும் வெள்ளிப்பிரம்பும் கொண்ட கும்பத்தில் மாரியம்மனை வரப்பண்ணி அக்கும்பத்துக்கு மாரியின் முகக்களையை வைத்து அடுக்குச்சாத்தி அலங்காரம் பண்ணி பின்னர் பூசை நேரத்தில் அச்சக்தியை கலையேறியாடும் தேவாதிகளுக்குக் கடத்தி அச்சக்தியுடன் குறை நிறைகளைக் கேட்டு உரையாடி வழிபடும் முறைமை இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு ஊர் ஊராக இடம்பெற்று வரும் சடங்கு வழிபாடுகள் பத்தசிச் சடங்குகள் என அழைக்கப்படுகின்றன.
பத்தசிச் சடங்கில் இடைத்தரகரின்றி நேரடியாகவே அம்மன் மனிதருள் உருக்கொண்டு மக்களுடன் உரையாடுகின்றார். நல்வாக்குக் கூறுகின்றார், விவாதிக்கிறார், பேரம் பேசுகின்றார் ஒட்டுமொத்தத்தில் தன்னை நம்பும் மக்களின் வாழ்வியலை வளப்படுத்தும் மனவளத்தை அருளுகின்றார்.
பறையிசையிலும் உடுக்கு ஓசையிலும் மாரி உருக்கொள்கிறாள், உள்ளுர்ப் புலவர்கள் அழகான தமிழில் பாடியுள்ள காவியம், சிந்து, அம்மானை, கும்மி, தாலாட்டு, உலா, எதிரேற்று என்ற உள்ளுர் இசைத்தமிழை ஊரின் முதியோரும் இளவல்களும் பாடுவதனைக் கேட்டு கூய்ப்போட்டு ஆட்டமாடி இன்புறுகின்றாள்.
மட்டக்களப்பு மாரியம்மன் சடங்கின் ஆதார இசையாக 'அமிர்தபரி பூரணி...' என்று தொடங்கும் சின்னக் காவியம் விளங்கி வருகின்றது.
பெருஞ் செலவின்றி உள்ளுரில் கிடைக்கும் தாமரைப்பூ, வேப்பிலை, கமுகம் பாளை, தென்னம்பாளை என்பவற்றினாலேயே தன்னை அலங்காரஞ் செய்யும்படி கேட்கிறாள்,
சடங்கு நாட்களில் உள்ளுர்க் கனி வகைகளையும் பாணக்கத்தையுமே விரும்பி உண்கிறாள் நிறைவு நாளன்று தன்னை நம்பும் மக்கள் தம்கையால் தயாரித்த பொங்கல், பலகாரம், ரொட்டி, கூழ், தினைமாவு, தயிர், பாணக்கம், கொழுக்கட்டை முதலிய தீன் பண்டங்களைப் பள்ளயமாகக் கேட்டுத் தானும் உண்டு மகிழ்ந்து தன்னடியார்களையும் திருப்தியுறச் செய்கிறாள்.
கப்புகன் எனப்படும் ஊர்ப் பூசகர்களின் உபசரணைகளையே விரும்பி ஏற்கிறாள். அடுத்த ஆண்டு வரும் வரை குறித்த நபரிலே முற்பட்டு சிரமங்களை ஏற்படுத்த மாட்டேன் என்று தனது கப்புகனாரிடம் தாரைவார்த்துச் சத்தியம் செய்து கொள்கிறாள்.
இவ்வாறு இன்னும்பல அழகினையும், சிறப்புக்களையும் தனித்துவங்களையும் கொண்டமைந்த மட்டக்களப்பின் பத்ததிச் சடங்குகளும் வழிபாடுகளும் தலைமுறை தலைமுறைகளாகத் தொடர்வதற்குச் சவாலாக இருப்பது சடங்கு வழிபாடுகள் சமஸ்கிருதமயமாக்கம் பெறத்தலைப்படுவதே எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.
நம்முன்னோர் வடிவமைத்த பத்தசிச் சடங்குகள் நின்று நிலைக்க வேண்டுமானால் விளங்காத வேற்றுமொழியில் கூலிவாங்கிப் பூசை செய்யும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு இடம் வழங்காத மடாலயக் கோவில்களும் அதில் கும்பத்துள் உருக்கொள்ளும் மாரியம்மனும் உருச்சிதைப்பிற்குள்ளாகாது பாதுகாக்கப்பட வேண்டும் என்று மூத்த பூசகர்கள் கருத்துக் கூறி வருகின்றார்கள்.
மாரியம்மன் சடங்குக் காலத்தில் மாரியம்மன் சடங்கின் அழகினையும் தனித்துவங்களையும் கருத்திற் கொள்வோம்... செயற்படுவோம்...