மட்டக்களப்பில் ஜனாதிபதியை பதவி விலககோரி ஆர்ப்பாட்டம்


இந்த நாட்டினை ஊழல் அற்ற நாட்டினை நேசிக்கும் ஒருவரிடம் ஆட்சியதிகாரத்தினை வழங்கிவிட்டு தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் எனவும் அவ்வாறு பதவி விலகும் வரையில் போராட்டப்போவதாகவும் மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இன்றைய அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதி பிரதமருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை இன்றைய தினம் முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தின்போது அரச நிறுவனங்களை விற்பதை நிறுத்து,மக்கள் ஆட்சிக்கு இடம்கொடு,திருடர்களை விரட்டியடிப்போம் போன்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி பிரதமருக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்த தேர்தல் ஒன்றை நடத்துமாறும் கோரிக்கைகள் முன்வைக்க்பபட்டன.