ஆய்வுச் செயற்பாடாக அன்னப்பட்சி சிறுவர் கூத்தாற்றுகை


கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் நாடகமும் அரங்கியலும் சிறப்புக் கற்கையில் ஈடுபடும் இறுதியாண்டு மாணவியான சி.சியானி அவர்களினால் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி தேசிய பெண்கள் பாடசாலையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்கும் மாணவர்களைப் பங்குகொள்ளச் செய்து மேற்கொள்ளப்பட்ட ஆற்றுகை மைய ஆய்வுச் செயற்பாட்டின் ஓரம்சமாகிய அன்னப்பட்சி சிறுவர் கூத்தின் அரங்கேற்ற விழா இன்று மாலை (10.07.2022) மட். மகாஜன கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இச்சிறுவர் கூத்தின் தயாரிப்பிற்கான அனுமதியை குறித்த பாடசாலையின் அதிபர் திரு.கா.அருமைராஜா அவர்கள் வழங்கியதுடன் ஆதரவினை நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான ஆசிரியர்களான திருமதி புனிதவாணி சிவகுமார், திருமதி றேக்கா கஜந்தன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இச்சிறுவர் கூத்தானது ஏட்டண்ணாவியார் செ.சிவநாயகம் அவர்களால் எழுதப்பட்டு அண்ணாவியார் சி.ஞானசேகரம் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.
நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்கும் உயர்தரம் மற்றும் தரம் பத்து வகுப்புக்களைச் சேர்ந்த மாணவிகள் இதில் சிறப்பாக ஆற்றுகை செய்திருந்தார்கள்.
இந்த ஆற்றுகை மைய ஆய்வுச் செயற்பாட்டின் மேற்பார்வையாளராக கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் செயற்பட்டுள்ளார்.
பாடசாலை அதிபர் திரு.கா.அருமைராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற அரங்கேற்ற விழாவில் அதிதிகளாக நுண்கலைத்துறைத் தலைவர் திரு. கு.ரவிச்சந்திரன், முதுநிலை விரிவுரையாளர் திரு. சு.சந்திரகுமார், உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.மு.தயானந்தன், கிழக்குப்பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் விரிவுரையாளர் வைத்தியர் திரு. ரஜீவன் பிரான்சிஸ் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இத்துடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், கலாசார அலுவலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், மாணவர்களின் பெற்றார்கள், கூத்துக்கலைஞர்கள், கலையார்வலர்கள் எனப்பலரும் பங்குபற்றி ஆற்றுகை செய்த மாணவர்களைப் பாராட்டினார்கள்.
கூத்து அரங்கேற்றத்தின் பின்னர் அதிதிகளினதும், பார்வையாளர்களினதும் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தன. தற்காலத்தில் சிறுவர் கூத்தரங்கின் தேவை முக்கியத்துவம் பற்றிப் பலரும் கருத்துரைத்ததுடன் ஆற்றுகை செய்த மாணவிகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் அண்ணாவியார், ஏட்டண்ணாவியார் மற்றும் பங்குபற்றிய கலைஞர்கள் மாண்பு செய்யப்பட்டனர்.