ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக குருதி நன்கொடை!!


(ஆர்.நிரோசன்)
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளனம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச சம்மேளனம் இணைந்த ஒழுங்கமைப்பில் காவியா பெண்கள் சுய தொழில் அபிவிருத்தி மற்றும் மோபிட்டெல் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் சமூக நல்லிணக்கத்துடன் ஆன இரத்ததான முகாம் இன்று(21) வியாழக்கிழமை காலை (8.30) மணி அளவில் மட்டக்களப்பு கல்லடி இளைஞர் பணிமனை மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் வைத்தியர் டி.தவநேசன், இரத்த வங்கி பொறுப்பு உத்தியோகத்தர் க.ஜெயராஜ் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கந்து கொண்டு இரத்த சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இத்துடன் இரத்த தானம் செய்தல் தொடர்பான அறிவுரையும் வழங்கப்பட்டது.

இதில் குறிப்பாக உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் 18 வயது முதல் 65 வயதுள்ள அனைவரும் ரத்ததானம் செய்யலாம். எனவும் இரத்த தானம் செய்பவர்களின் உடல் எடை சுமார் 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும் எனவும்  ஒருமுறை 350 லிருந்து 450 மில்லி லீட்டர் வரை (ஒரு யூனிட்) இரத்தத்தைக் கொடுக்கலாம். இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் வராது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல், ஒரு முறை இரத்த தானம் செய்துவிட்டால் 3 மாதம் கழித்து மீண்டும் இரத்த தானம் செய்யலாம்.

பொதுவாக, ஆண்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்துக்கு ஒரு முறையும் இரத்ததானம் செய்வது சிறந்தது.

உடல் நலப் பிரச்னைகள், மாதவிடாய் காலத்திலுள்ள பெண்கள், மதுபோதையில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் தாய்மார்கள் இரத்த தானம் செய்ய முடியாது என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டதோடு, இந் நிகழ்வில் Covid - 19 பரவலை தடுப்பதற்கான சுகாதார வழிமுறைகள் பேணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சுமார் 150 க்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.