2022ம் ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை இன்று (19) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் இன்று காலை மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று காலை முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் தம்பிராசா அருமைத்துறை தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி கல்விப்பணிப்பாளர் திருமதி உமாவதி விவேகானந்தம்,ஆங்கில கல்வி இணைப்பாளரும் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் திருமதி விக்னேஸ்வரி மகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்றைய தினம் சுமார் 160மாணவர்கள் முதலாம் தரத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இரண்டாம் தர மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பெற்றோர் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்களும் வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திபெற்ற மாணவர்களைக்கொண்ட பாடசாலையாக கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.