காந்திய வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்த்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினமான இன்று நினைவுதினத்தினை அனுஸ்டிக்கச்சென்றவர்கள் திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும் வடகிழக்கு இணைந்த தீர்வினை தமிழர்களுக்கு வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக அன்னை பூபதி உண்ணாவிரதமிருந்துவந்தார்.
இந்த நிலையில் அவரது போராட்டம் கவனத்தில் கொள்ளப்படாத நிலையில் 19-04-1988 உண்ணாவிரதத்தின்போது உயிர்நீர்த்தார்.
அவரின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினமாகும்.இன்றைய தினம் மட்டக்களப்பு,நாவலடியில் உள்ள அவரின் சமாதியில் நினைவு தினத்தை அனுஸ்டிக்கச்சென்றவர்களை பொலிஸார் திருப்பியனுப்பிய சம்பவம் இன்று நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் ஆகியோர் சென்றவேளையில் அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் எக்காரணம் கொண்டும் யாரும் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டர்கள் என தெரிவித்தனர்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனின் கைகளிலிருந்த கற்பூரத்தினையும் தட்டுவிட்ட பொலிஸார் அவர்களை அங்கிருந்துசெல்லுமாறு கடும் தோனியில் அறிவுறுத்தியதையும் காணமுடிந்தது.
நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் யாரும் அன்னைபூபதியின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தமுடியாது என தெரிவித்த பொலிஸார் மீறி செய்தால் கைதுசெய்யப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினை சேர்ந்த முன்னாள் உறுப்பினராகயிருந்த அன்னை பூபதியை நினைவு கூர நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தினை சேர்ந்த காரணத்தினாலும் இந்த நிகழ்வுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து உறுப்பினர்கள் வருகைதரும் நிலையுள்ளதாலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி காரணமாக இனங்களிடையே கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும் மற்றும் கொரனா தொற்று காரணமாக சுகாதார கடைப்பிடிக்கவேண்டியுள்ளதாலும் குறித்த நிகழ்வினை தடைசெய்யுமாறு காத்தான்குடி பொலிஸாரினால் நீதிவான் நீதிமன்றில் கோரப்பட்டதற்கு அமைவாக இந்த தடை வழங்கப்பட்டுள்ளதாக இங்கு பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.
நாங்கள் இரண்டு பேர் மட்டுமே அஞ்சலி செலுத்தவந்துள்ளோம் இதனால் எந்த கலவரங்களும் ஏற்படப்போவதில்லை,சுகாதார நடைமுறையும் பாதிக்கப்படப்போவதில்லை.காலிமுகத்திட்டலில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ள நிலையில் இங்குமட்டும் இவ்வாறான தடைகளை ஏன் ஏற்படுத்துகின்றீர்கள் என பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் என்பதை தற்போதைய இந்த செயற்பாடு மீண்டும் இந்த நாட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நாட்டில் போர்வேண்டாம் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று போராடிய ஒரு அன்னையினை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினராக நீதிமன்றிடம் தவறாக காட்டப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் வேதனையான செயற்பாடுகள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடுமையான வாக்குவாதங்களை தொடர்ந்து நினைவு தினத்தை அனுஸ்டிக்காது இரண்டு முன்னாள் திரும்பிச்சென்ற நிலையில் நினைவு தினத்தை வீடுகளில் அனுஸ்டிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.