எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கஜகஸ்தானில் பெரும் போராட்டம் வெடித்த நிலையில் அதனைச் சமாளிக்க முடியாமல் பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு ராஜினாமா செய்துள்ளது.
போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் முகமாக அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள போதும் தொடர்ந்தும், ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் வளங்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளுள் ஒன்றான கஜகஸ்தானில் புத்தாண்டு முதல் திரவ பெட்ரோலிய எரிவாயுக்கான விலை அதிகரித்தது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி நாடான கஜகஸ்தானில் விலை உயர்வு நியாயமே இல்லை எனக் கூறி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். விலை உயர்வை எதிர்த்து தலைநகர் அல்மாட்டி மற்றும் மேற்கு மாகாணமான மங்கிஸ்டா உள்ளிட்ட பல நகரங்களில் பல ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடினர்.
போராட்டக்காரர்களால் தலைநகர் அல்மாட்டி மாநகராட்சி அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் அரச கட்டடங்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸாருக்கும் – பொதுமக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. பொலிஸார் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
எனினும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் திரண்டதால் வேறு வழியின்றி பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு ராஜினாமா செய்துள்ளது.
இந்த ராஜினாமாவை கஜகஸ்தான் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோக்காயேவ் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிவாயு விலையை கட்டுப்படுத்துமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை, அரசுக்கு எதிரான போராட்டம் சில தரப்புக்களின் தூண்டுதலாலேயே இடம்பெற்றதாக ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோக்காயேவ் விமர்சித்துள்ளார். இந்த எதிர்ப்புக்கள் நாட்டின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி எனத் தெரிவித்த அவா், சதிகாரர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
ஜனாதிபதி என்ற முறையில், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பாதுகாக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். கஜகஸ்தானின் ஒருமைப்பாடு பற்றி கவலைப்படுகிறேன் என நேற்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் தெரிவித்தார்.
இதேவேளை, அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என வர்ணித்த அல்மாட்டி நகரின் பொலிஸ தலைமை அதிகாரி கனாட் டைமர்டெனோவ், அவர்கள் 500 பொதுமக்களைத் தாக்கி நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களை சூறையாடியதாக குற்றஞ்சாட்டினார்.