‘கிழக்கில் உள்ள சில அரசியல்வாதிகளினால் திட்டமிட்டு நாங்கள் கைதுசெய்யப்பட்டோம்’(VIDEO)

பொன்.நவநீதன்

வடக்கில் இறந்தவர்கள் கிழக்கில் நினைவுகூரப்படக்கூடாது,கிழக்கு மக்களுக்கு அதன் பிரதிபலிப்பு தெரியக்கூடாது என்ற கோட்பாட்டுடன் அந்த அரசியல்வாதிகள் இருந்த காரணத்தினால் திட்டமிட்டு நாங்கள் கைதுசெய்யப்பட்டோம் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தியதாக கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என கடந்த மே 18ஆம் திகதி மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 10பேரும் இன்று சிறையில்  இருந்து வெளியேவந்தனர்.

விடுதலைiயை கடந்த மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில், அவர் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி, கடலில் பூக்களைத் தூவி, அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்து.

வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி ரம்ஷீன் உட்பட சட்டததரணி குலாம் விண்ணப்பித்த பிணை மனுவின் அடிப்படையில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

நேற்று நீதிமன்றம் பிணை வழங்கியதையடுத்து இன்று காலை 10 பேருக்கும் சிறைச்சாலையில் அன்டிஜன் பரிசோதனைகள் பரிட்சிக்கப்பட்டு பகல் 1 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைசெய்யப்பட்டவர்களை சிறைச்சாலையில் வெளியில் வைத்து உறவினர்கள் வரவேற்றதுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்,வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் சேகர் ஆகியோரும் வருகைதந்து வரவேற்றனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள்,

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை நினைந்து நாங்கள் ஒவ்வொரு வருடமும் நினைவுதினம் அனுஸ்டிக்கின்றோம்.2019ஆம் ஆண்டு அதே கிரானில் நாங்கள் நினைவுதினம் அனுஸ்டித்தோம்.எந்தவொரு இடையூறுகளும் எங்களுக்கு இருக்கவில்லை.

ஆனால் இந்த ஆண்டு எமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்வினை செய்தபோது கிழக்கில் உள்ள சில அரசியல்வாதிகளினால் திட்டமிட்டு நாங்கள் கைதுசெய்யப்பட்டதாக உணர்கின்றோம்.

எமது உறவுகள் பல இறுதி யுத்ததின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்திருக்கின்றார்கள்.அந்த மரணத்திற்காக மாத்திரமே அந்த நிகழ்வினை நாங்கள் செய்தோம்.

ஆனர் அரசியல்வாதிகள் கிழக்கு மாகாணத்தில் தங்களது ஆளுமையினை காட்டவேண்டும்,வடக்கில் இறந்தவர்கள் கிழக்கில் நினைவுகூரப்படக்கூடாது,கிழக்கு மக்களுக்கு அதன் பிரதிபலிப்பு தெரியக்கூடாது என்ற கோட்பாட்டுடன் அந்த அரசியல்வாதிகள் இருந்த காரணத்தினால் திட்டமிட்டு நாங்கள் கைதுசெய்யப்பட்டோட்.ஏழு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக எங்களது குடும்பங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டன.

எமது கைது ஒரு அநியாயமான கைதாகும்.இதேபோன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் 09 தமிழ் கைதிகள் உள்ளனர்.இவர்கள் 2020 டிசம்பர் மாதம் 27ஆம் திகதி கைதுசெய்யப்பட்டவர்கள்.அவர்களுக்கான வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதிலும் எந்தமுடிவுகளும் எட்டப்படவில்லை.

அவர்களது வழக்குகளும் துரிதப்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் விரைவாக அவர்களும் அவர்களது குடும்பங்களுடன் சென்று மகிழ்ச்சியாக வாழவேண்டும்.