மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை ஆசிரியர்கள் சுகவீன போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்


சிவானந்தா வித்தியாலய ஆசிரியை தாக்கப்பட்டமைக்கு எதிராகவும், ஆசிரியர்களை கடமையைச் செய்ய விடாமல் தடுத்தமைக்கு எதிராகவும்,சுதந்திர விசாரணை வேண்டி மட்டக்களப்பு மாவட்ட அனைத்து அசிரியர்களும் ஒன்றிணைந்து 2021.12.10 வெள்ளிக்கிழமை அன்று சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021.12.06 திங்கட்கிழமையன்று சிவானந்தா வித்தியாலயத்திற்கு முன்னால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு ஆசிரியை தாக்கப்பட்டமை மற்றும் ஆசிரியர்களை கடமையைச் செய்யவிடாமல் இடையூறு விளைவித்தமைக்கு எதிராக வன்மையான கண்டனத்தை இலங்கை ஆசிரிய சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை தெரிவித்துக் கொள்கின்றது.

இது அப்பாடசாலை ஆசிரியர்களை மாத்திரமன்றி சகல ஆசிரியர்களையும் அரசியல் அதிகாரத்தைக்கொண்டு அடக்க முனைவதாகவே நோக்கவேண்டியுள்ளது. ஏனென்றால் கட்சி அரசியல் பின்புலத்துடனேயே இது முன்னெடுக்கப்பட்டது என்பதும், ஏற்கனவே தன் அரசியல் செல்வாக்கைக்கொண்டு அதிபர், ஆசிரியர்களைப் பயமுறுத்தியுள்ளதும் தெரிந்த விடயம்,பாடசாலைக்குள் தன் அரசியல் செல்வாக்கை யார் பயன்படுத்தினாலும் அது பிழையான விடயமே.

அண்மைக்காலமாக மட்டக்களப்பின் கல்விப்புலத்தினுள் கட்சி அரசியல் செல்வாக்குச் செலுத்திவருகின்றது. இது முற்றாக நிறுத்தப்பட்டு கல்விச் செயற்பாடுகள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் முன்னெடுக்கப்படும்போதே பிரதேசத்தின் கல்வியறிவு சரியான வளர்ச்சி நிலையை அடையும் என்பதில்

நாம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளோம்.

ஆசிரியர்களை அதிகார அரசியலைக்கொண்டு அடக்க முற்படுவதற்கு எதிராகவும்,சிவானந்தா வித்தியாலய ஆசிரியை தாக்கப்பட்டமைக்கு எதிராகவும், ஆசிரியர்களை கடமையைச் செய்ய விடாமல் தடுத்தமைக்கு எதிராகவும்,சுதந்திர விசாரணை வேண்டி மட்டக்களப்பு மாவட்ட அனைத்து அசிரியர்களும் ஒன்றிணைந்து 2021.12.10 வெள்ளிக்கிழமை அன்று சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளார்கள்.இது ஆசிரியர்களுக்கான போராட்டம்.