மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு ஒரு தொகை உடுதுணிகள் இன்று மாலை வழங்கிவைக்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் ஊடாக இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கரடியன்குளம் பகுதியானது எந்தவித அடிப்படைவசதிகளும் இல்லாத மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் வாழும் பகுதியாகும்.இப்பகுதிக்கு சங்கத்தின் கிழக்கு மாகாண சங்கத்தின் உதவி செயலாளர் மறைந்த திருமதி செல்வி மனோகர் சென்றிருந்த காலப்பகுதியில் இப்பகுதி மக்களின் நிலைமைகள் குறித்து சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் மற்றும் உதவிச்செயலாளர் வி.பேரின்பராசா மற்றும் அங்கத்தவர்களான ரமேஸ்,வின்சன் ஆகியோர்களின் முயற்சியினாலும் அமைப்பின் தலைவர் டி.எல்.சுதர்சன் பொருளாளர் க.துரைநாயகம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த உடுதுணிகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இவற்றினை சுவிஸ் உதயம் அமைப்பின் மட்டக்களப்பு இணைப்பாளர் திருமதி றோமிலா செங்கமலன் குறித்த பகுதி மக்களுக்கு வழங்கிவைத்தார்.
இதன்போது சுமார் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த உடுதுணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.