நுண்கடன் நிறுவன ஊழியர்கள் களுவாஞ்சிகுடி பகுதியில் விசேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் யுத்தகாலத்தில் திரிவதுபோன்ற திரிவதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ் தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள நிதி நிறுவனங்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் பிரதேசசபையில் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றும் நுண்கடன் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை பகுதிக்குள் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலின்போது மக்களினை அச்சுறுத்தும் வகையில் நுண்கடன் நிறுவனங்கள் செயற்படக்கூடாது எனவும் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் பிரதேசசபையில் பதிவுசெய்யப்பட்டு அதற்கான அனுமதியைப்பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தவிசாளரினால் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் நுண்கடன் வழங்கும்போது மக்களிடம் வழங்கப்பட்டு கையொப்பம் வாங்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழிலும் இருக்கவேண்டும் எனவும் இது கட்டாயம் எனவும் இங்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்கள் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்காலத்தில் செயல்படமுடியாது எனவும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.