60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டக்களப்பில் வீடுவீடாக சென்று இராணுவத்தினர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றாளர்களும் தொற்றினால் உயிரிழப்போரும் அதிகரித்துவரும் நிலையில் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை வீடுவீடாக சென்று ஏற்றும் நடவடிக்கைகளை இன்று முதல் இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் கொரனாவினால் உயிரிழப்பும் அதிகரித்துவருகின்றது.

இதனை கருத்தில் கொண்டு சுகாதார அமைப்பும்,இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து வீடுவீடாக சென்று தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசியைப்பெற்றுக்கொள்ளமுடியாத 60வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இன்றைய தினம் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

இராணுவத்தின் மருத்துவ பிரிவானது பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்கீழ் இன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திராய்மடு,பனிச்சங்கேணி,கொக்குவில்,சத்துருக்கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள 60வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வீடுவீடாக சென்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.