மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாவது நாளாகவும் முடக்கம் - தீவிர சோதனை நடவடிக்கையில் படையினர்


நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரனா தொற்றின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கிய நிலையில் உள்ளதை காணமுடிகின்றது.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதனை மீறுவோரை கண்டறியும் வகையில் படையினரும் பொலிஸாரும் இணைந்து விசேட வீதிச்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

அத்தியாவசிய தேவை தவிர்ந்தவகையில் நடமாடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிகளும்முற்றாக முடங்கியுள்ளதை காணமுடிகின்றது.

எனினும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி செயற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் வீதிகளில் ஒன்றுகூடி நின்றவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.