மட்டக்களப்பு மாநகரசபைக்குள் வர்த்தக நிலையங்களை மூட நடவடிக்கை - மாநகர முதல்வர்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கொரனா தொற்று அதிகரித்துவருவதன் காரணமாக மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் தவிர்ந்து ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளை தனிமைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் தேசிய கொரனா செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பூநொச்சிமுனை,கல்லடி வேலூர்,திருச்செந்தூர்,பாலமீன்மடு,சின்னஊறணி ஆகிய ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளும் முற்றாக முடக்கப்படுகின்றது.இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று முதல் மூடப்படுகின்றது.அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி மாநகரசபை எல்லைக்குள் கொரனா தொற்றினை தடுப்பதற்கு அனைவரையும் ஒத்துழைப்பினையும் மாநகரசபை வேண்டிக்கொள்வதாகவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

மருத்துவிற்பனை நிலையங்கள்,மரக்கறி விற்பனை நிலையங்கள்,பழ விற்பனை நிலையங்கள்,பல சரக்கு விற்பனை நிலையங்கள்,பேக்கரிகள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் உடனடியாக மூடப்படவேண்டும்.

திறக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும்,அவ்வாறு செயற்படாத வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும்.

மாநகரத்திற்குள் கொரனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பினையும் வேண்டிநிற்கின்றோம்.பொதுமக்கள் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களையும் மாநகரசபையின் அறிவுறுத்தல்களையும் ஏற்று செயற்படமுன்வரவேண்டும்.இதன்மூலமே மாநகருக்குள் கொரனா தொற்றினை கட்டுப்படுத்தமுடியும்.