கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தியில் பயணத்தடையை மீறி நடமாடியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வீதியில் அனாவசியமாக பயணம் செய்தோர், வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டோர், நடமாடும் வியாபாரம் செய்தோருக்கு நடமாடும் பரிசோதனை மேலெழுவாரியாக இன்று சனிக்கிழமை இடம்பெற்றதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.
இதன்போது இருபத்தி நான்கு (24) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அதனுடன் பதினான்கு (14) நபர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகளும் இடம்பெற்றதுடன்இ அன்டிஜன் பரிசோதனை மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அன்டிஜன் பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.