போரதீவுப்பற்றில் அதிகரிக்கும் கொரனா தொற்றாளர்கள் -21பேருக்கு தொற்று உறுதி


(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று சுகாதார பிரிவில் மேற்கொள்ளப்பட்ட 97அன்டிஜன் பரிசோதனைகளில் 21பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் கொரனா தொற்றாளர்கள் காரணமாக மாவட்டத்தில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அண்மையில் ஆரையம்பதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அந்த தொழிற்சாலையுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இன்றைய தினம் போரதீவுப்பற்று சுகாதார பிரிவிற்குட்பட்ட கோவீல்போரதீவு,பெரியபோரதீவு,பழுகாமம்,பெரிய காந்திபுரம்,தும்பங்கேனி,களுமுந்தன்வெளி,இளைஞர் விவசாயத்திட்டம் ஆகிய பகுதிகளில் அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு போரதீவுப்பற்று பிரதேசசபையும் உதவிவருவதுடன் தவிசாளரும் அப்பகுதிகளுக்கு விஜயம் செய்து சுகாதார துறையினருக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இன்றைய தினம் 97பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 21பேர் கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன் அவர்கள் ஆடைத்தொழிற்சாலையுடன் நேரடியாக தொடர்புகொண்டவர்களும் அவர்களது உறவினர்களும் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியான அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த ஆடைத்தொழிற்சாலை எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் மூடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.