புத்தாண்டினை முன்னிட்டு சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு சந்தை


புத்தாண்டு தினத்தில் பொதுமக்கள் தமக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையிலும் தரமான பொருட்களாகவும் கொள்வனவுசெய்யும் வகையில் சமுர்த்தி திணைக்களம் ஊடாக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

கொவிட் தாக்கத்தினால் வருமானம் குறைந்து மக்களும் உற்பத்தியாளர்களும் பயனடையும் வகையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கிராமிய உற்பத்தி வகைகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் ‘அன்பான வணிகன்’புத்தாண்டு சந்தைகள் திறந்துவைக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய சந்தை கூழாவடியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமுர்த்தி திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளர்களான எஸ்.மனோகிதராஜா,திருமதி நிர்மலா கிரிதரன் உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சியில் சமுர்த்தி உதவி திட்டம் ஊடாக உற்பத்திதுறையில் ஈடுபட்டுவருவோரின் உற்பத்திகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் விற்பனையும் நடைபெற்றது.

இவ்வாறான சந்தைகள் மூலம் கிராமமட்டத்தில் உள்ள வருமானம் குறைந்த மக்கள் புத்தாண்டுக்கான பொருட்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்துகொள்ளமுடியும் என்பதுடன் உற்பத்தியாளர்களும் தமது பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.