விழிப்புலன் அற்ற பல்கலைக்கழக மாணவனுக்கான தட்டச்சு இயந்திரம் வழங்கி வைப்பு


கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் ஊடாக பல்வேறு கல்வி¸ சுகாதார மற்றும் வாழ்வாதார செயற்திட்டங்கள் கடந்த பல காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு அங்கமாக வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த இருவிழி பார்வையற்ற விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவரான செல்வன் புஸ்பாகரன் தில்லையன் என்பவருக்கு விழிப்புலன் அற்றவர்கள் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையால் வழங்கி வைக்கப்பட்டது.

செல்வன் புஸ்பாகரன் தில்லையன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு 1ம் ஆண்டில் கல்வி கற்று வருவதோடு தனது ஆரம்ப நிலைக் கல்வியினை மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் பயின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாணவனின் கல்விச் செயற்பாடுகளுக்கு மிகத்தேவையாக இருந்த Braille Machine எனப்படும் விழிப்புலனற்றவர்கள் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரமானது சுமார் ரூபாய் 200,000 பெறுமதியில் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு, இவ் வழங்கிவைக்கும் நிகழ்வில் கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் அலுவலக உத்தியோகஸ்தர்களான திருமதி.D.குளோரி¸ செல்வன் கி.கிஷாந் மற்றும் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் செல்வன் பி.துசாந்தன் என்போர் கலந்து கொண்டனர்.