தனியார் வகுப்புகள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீறுவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொவிட் செயலணிக்கூட்டம் இன்று செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்மையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே சில விடயங்கள் கடைப்பிடிக்கப்படாமை சுட்டிக்காட்டப்பட்டது.
பொதுமக்கள் அதிகளவாக நகர்ப்புறங்களில் நடமாடுவதாகவும் அத்துடன் ஒருசில இடங்களில் தனியார் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இன்றிலிருந்து தனியார் வகுப்புக்களை கண்டிப்பாக நிறுத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. இதனை மீறுவோர் சுகாதார பரிசோதகர்களாலும் பொலிஸாராலும் மேற்பார்வை செய்யப்பட்டு உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலே ஒட்சிசனின் அளவு ஒரு நாளைக்கு 4-5 தேவைப்படுவதே வழக்கமாகும். ஆனால் கொரொனா நோயாளர்களையும் அங்கு அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுவதன் காரணமாக நேற்றைய தினம் 15சிலிண்டர்களின் தேவைப்பாடு எழுந்துள்ளது. இவ்வியடம் தொடர்பில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அவர்கள் தெரிவித்திருந்தார். இவ்வளவு காலமும் நாங்கள் ஒட்சிசனைப் பற்றி சிந்திக்கவில்லை. மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஏற்படுத்துகின்ற கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடித்தால்தான் நாங்கள் கொரொனா அச்சத்திலிருந்து மீளமுடியும்.
நேற்றைய தினம் பல்வேறு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டதாக குறிப்பிட்டார்கள். ஏற்கனவே சுற்றறிக்கையில் கூறப்பட்டதன்படி மரணச்சடங்குகளில் 25பேருக்கு மேல் கூடவேண்டாம், ஆலயங்களிலோ தேவாலயங்களிலோ 50பேருக்கு மேல் கூடவேண்டாம், பொதுஇடங்களில் அநாவசியமாக ஒன்றுகூட வேண்டாம்.
நீரழிவுநோய் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்க வேண்டும். ஏனென்றால் தற்போது பரவுகின்ற கொரொனா வைரஸானது இளம்சிறார்களையும் தாக்குவதால் இவ்வகையான நோயாளிகளை தாக்குவதற்கான சந்தர்ப்பம் மிக அதிகமாகும்.
இவ்வகையான அறிவுரைகளை கேட்டு பொதுமக்கள் சுகாதாரதுறையினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினால் எந்தவித பயமுமின்றி நாங்கள் சந்தோஷமாக வாழலாம். அல்லாவிட்டால் சில மாவட்டங்கள் எதிர்நோக்குகின்ற அபாயமான நிலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் ஏற்படும் என்பதை மனவேதனையுடன் கூறவேண்டியுள்ளது.