மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் 27 கொரனா தொற்றாளர்கள் -டாக்டர் நா.மயூரன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் 27 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் 27 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 20பேர் வாழைச்சேனை பகுதியை சேர்ந்தவர்களாவர். இதில் 18பேர் பிரபல்யமான உணவகம் ஒன்றில் பணி புரிபவர்களாவர். மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பிரிவில் மூவரும் களுவாஞ்சிகுடி பிரிவில் ஒருவரும் செங்கலடி  பிரிவில் ஒருவரும் ஆரையம்பதி பிரிவில் ஒருவரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். 

இதுவரை மட்டக்களப்பு பிராந்தியத்தில் 1073 கொவிட் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 94பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9பேர் மரணித்துள்ளனர். 970பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 

மூன்றாவது கொவிட் 19 அலையானது இம்மாதம் 22ஆந்திகதியாகும். இது முதலிரண்டு அலைகளைப்போலல்லாமல் நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு ஒட்சிசன் தேவைப்படும் நிலைமை அதிகமாக காணப்படுகின்றது. மட்டக்களப்பில் இதுவரை கரடியனாறு, காத்தான்குடி, பெரியகல்லாறு என மூன்று வைத்தியசாலைகளை கொவிட் வைத்தியசாலைகளாக மாற்றியுள்ளோம். வேறு மாவட்டங்கள், மாகாணங்களிலிருந்து நோயாளர்களை நாங்கள் அனுமதிப்பதால் கிட்டத்தட்ட 75வீதத்திற்கு மேற்பட்ட கட்டில்கள் நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளது.

 வருங்காலத்தில் எமது மாவட்டத்தினுள் அடையாளங்காணப்படும் நோயாளர்களை வேறு மாவட்டங்களுக்கு அனுப்பக்கூடிய நிலை ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன. நாங்கள் நான்காவது கட்டமாக வாகரை வைத்தியசாலையை கொவிட் வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அது திறக்கப்படும். 

மூன்றாவது அலை ஆரம்பித்து ஒன்பது நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 91நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூன்றாவது அலையில் அதிகளவான நோயாளர்கள் அடையாளங்காணப்படுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதற்காக நான்கு ஆதார வைத்தியசாலைகளையும் ஒரு பிரதேச வைத்தியசாலையையும் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தெரிவு செய்து வைத்துள்ளோம். மிகக்குறைவான அறிகுறிகளுடன் இனங்காணப்படுகின்ற நோயாளர்களை இந்த மூன்று வைத்தியசாலைகளிலும் வைத்து பராமரிப்பதே எங்களுடைய திட்டமாகும். அதற்கும் மேலாக வருபவர்களை மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதித்து அவர்களை பராமரிக்கக்கூடியதாயிருக்கும்.