கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தரின் மனிதாபிமானம் -குவியும் பாராட்டு

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் சமர்ப்பிக்க பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கை அனைவரது பாராட்டையும் பெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தரான ஆர்.பி.டி.துமிந்த(90518) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே மேற்படி பணப்பையைக் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கையெடுத்தவராவார். 

அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்கு வந்து கொண்டிருந்தபோதே மாவடி முன்மாரி பகுதியில் வீதியில் கிடந்த பணப்பையைக் கண்டெடுத்துள்ளார்,குறித்த பணப்பையில் 11300.00 ரூபாய் பணம்,சாரதி அனுமதிப் பத்திரம்,ஏரீஎம் அட்டை,வாகன காப்புறுதி,தேசிய அடையாள அட்டை உட்பட பல தஸ்தாவேஜூகளும் அடங்கியிருந்தன.

இது தொடர்பில் அறிந்த மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை அழைத்து பாராட்டுக்களை தெரிவித்ததுடன் பணப்பையை உரியவரிடம் வழங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டார்.

குறித்த பணப்பைக்குச் சொந்தக்காரரான முனைக்காட்டைச் சேர்ந்த குணரட்ணம் கனிஸ்டன் உயர் வகுப்பு மாணவனிடம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க பணப்பையை ஒப்படைத்தார்.

பணப்பையைக் கண்டெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த வாரமே மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அவருக்கு இவ்வருடத்திற்கான சாதனை படைத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விருதும் வழங்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.