இந்துக்கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான செயலமர்வு

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான திறமைகளை இனங்காணலும் அதனை பயிற்;றுவிப்பதற்குமான செயலமர்வு மட்டக்களப்பில் அண்மையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவினையொட்டி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

சப்ரகமுவ பல்கலைக்கழகமும் இந்துக்கல்லூரியும் இணைந்து இந்த செயலமர்வினை முன்னெடுத்தது.

பாடசாலை அதிபர் இரா.சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஜொனிட்டன்,கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு துறை பணிப்பாளர் திருமதி ரோகினி புவனசிங்கம்,மட்டக்களப்பு வலய உடற்கல்வி பிரதிக்கல்வி பணிப்பாளர் வி.லவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் வி.திருச்செல்வத்தின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயலமர்வின்போது பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் உள்ள திறமைகள் இனங்கண்டு அதற்கான அடிப்படை பயிற்சிகளை வழங்குதல்,மாணவர்கள் சிறந்த தேக ஆரோக்கியத்தினையும் மன ஆளுமையினையும் பெற்றுக்கொள்வதற்கு வழங்கவேண்டிய உடற் பயிற்சிகள் குறித்தான பல்வேறு விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதன்போது பயிற்சி அடைப்படையிலும் செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் 50 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டதுடன் பயிற்சி நிறைவில் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த செயலமர்வில் கலந்துகொண்டு பயிற்களையும் விரிவுரையினையும் வழங்கிய சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஜொனிட்டன் இதன்போது நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.