(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர்-ஆனைகட்டியவெளி பிரதான வீதியை நிரந்தர வீதியாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஆனைகட்டியவெளி - மண்டூர் பிரதான வீதியானது மிக நீண்டகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,பொதுமக்கள்,விவசாயிகள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் எதிர்நோக்குகின்றனர்.இவ் வீதியானது வெள்ள அனர்த்தம் ஏற்படும்போது முற்றுமுழுதாக பாதிக்கப்படுவதுடன் மீண்டும் புனரமைக்கப்படுவதும் பாதிக்கப்படுவதுமாகயிருந்துவருகின்றது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த வீதி கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாக தற்போது அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக விவசாயிகள் அறுவடைக்கான வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுள்ளது. இந்த வீதியூடாக சின்னவத்தை,ஆனைகட்டியவெளி,நெடியவட்டை, கல்வெட்டை,காக்காச்சிவட்டை,பலாச்சோலை,35ஆம் கிராமம் போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் விவசாயிகள் மிகவும் கஸ்டமான நிலையில் தமது அறுவடைகளை முன்னெடுத்துவரும் அதேவேளையில் கர்ப்பிணி தாய்மார்கள், சிறு குழந்தைகள்,மாணவர்கள்,உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே தமது கடமைக்கு சென்றுவருகின்றனர்.அத்துடன் திடிரென யாரும் பாதிக்கப்படும்போதோ,வயோதிபர்கள் நோய்ஏற்படுகின்ற போதோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவதில் தாமதம் ஏற்படுகின்ற காரணத்தினால் உயிரிழப்புகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பமும் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
இந்த வீதியானது விவசாயத் திணைக்களத்திற்கு உரிய வீதியாக காணப்படுகின்ற நிலையில் இந்த வீதியை நிரந்தர வீதியாகவும் வெள்ளத்தினால் பாதிக்கப்படாத வீதியாகவும் புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேநேரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வீதியை தற்காலிமாக புனரமைத்து மக்களின் பாவனைக்கு வழங்கும் நடவடிக்கையினை இன்று போரதீவுப்பற்று பிரதேசசபை முன்னெடுத்தது.மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் உதவியுடன் விவசாய அமைப்புகள்,கிராமிய அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வீதியின் புனரமைப்பு பணிகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் நேரடியாக சென்று பார்வையிட்டு தேவையான உதவிகளை வழங்கினார். போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி தலையில் இந்த வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.












