கொரனா தொற்றில் உயிரிழந்தவரின் மனைவியும் உயிரிழப்பு –கோட்டைமுனை பகுதியை சேர்ந்தவர்கள்


மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட கோட்டைமுனை பகுதியை சேர்ந்த பெண்னொருவர் கொரனா தொற்று காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கிசிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று (22)காலை உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு அரசடி கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கோட்டமுனையில் கொரனா தொற்று காரணமாக கடந்த 16ஆம் திகதி 79வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த ஆணின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கொரனா தொற்றின் ஆபத்து உணரப்பட்டு அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக முடக்கப்பட்டது.

இந்த நிலையில் உயிரிழந்த ஆணின் மனைவி (71வயது)கொரனா தொற்று காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் அரசடி கிராம சேவையாளர் பிரிவில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்,பீசீஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 22பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை 11பேரும் இன்று பகல் 12மணி வரையான காலப்பகுதியில் பட்டிப்பளை சுகாதார பிரிவில் ஒருவருமாக இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 531பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.