பொங்கல் பானைகளுடன் வீதியில் நின்று போராடிய பண்ணையாளர்கள்


தமிழர்கள் நேற்று உலகெங்கும் பட்டிப்பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடிய அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் வீதிகளில் பொங்கல் பானைகளை வைத்து நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பேசுபொருளாக இருக்கும் மயித்தமடு,மாதவனை பகுதியில் கால்நடை வளர்ப்போர் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினையை தீர்த்துவைக்குமாறு கோரி இவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.

சித்தாண்டி சந்தியில் ஒன்றுகூடிய கால்நடை பண்ணையாளர்கள் வீதிகளில் பொங்கல் பாணைகளை வைத்து போராட்டத்தினை நடாத்தினர்.

வாழைச்சேனை-மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்தும் இதன்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தாங்கள் தமது கால்நடைகள் வளர்க்கமுடியாத வகையில் தங்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் தினம்தினம் கால்நடைகள் கொல்லப்படும் சம்பவங்களும் இடம்பெறுவதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதன்பொது ஒன்றிணைந்த பண்ணையாளர்கள் எமது நிலம் எமக்கு வேண்டும் என பல கோஷங்களுடன் கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர்

போராட்டத்தில் மட்டக்களப்புமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன், தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் உட்பட்ட ஊர்மக்கள் மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பண்ணையாளர்கள் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை-மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டது.இதன்போது அங்குவந்த பொலிஸார் போராட்டக்காரர்களை அகற்றி போக்குவரத்தினை வழமை நிலைமைக்கு கொண்டுவந்தனர்.