பிணையில் விடுவிக்கப்பட்ட பண்ணையாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணைப் மேச்சத் தரைப்பகுதியில்  நேற்றைய தினம்  தாக்குதலுக்குள்ளான நிலையில் காணாமல்போனதாக தெரிவிக்கப்படும் ஆறு பண்ணையாளர்கள்  மகா ஓயா பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை தினம்  தெய்வத்த கண்டிய நீதிவான் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்திய பின்னர் 6 பண்ணையாளர்களும் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பண்ணையாளர்களுக்கும்  எதிர்வரும் 3ஆம் மாதம் 10ஆம் தேதி  குறித்த வழக்கு இடம்பெறவுள்ளது.

இதேநேரம் தாக்குதலுக்குள்ளாகியிருந்த பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மயிலத்தமடுவில் தமது கால்நடைகளை தேடிச்சென்றவர்களை அங்கு சட்ட விரோதமாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் பிடித்து கடுமையாக தாக்கிய பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

பண்ணையாளர்களை வைத்தியசாலைக்கு சென்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல்தரையான மயிலத்தமடுவில் மாடு மேய்க்க சென்ற பண்ணையாளர்கள் ஆறுபேர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதை கண்டித்தும் அவர்களை விடுதலைசெய்யக்கோரியும் இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று சிந்தாண்டி சந்தியில் பண்ணையாளர்கள்,சிவில் அமைப்பு பிரதிநிதிகள்,தமிழ்தேசிய அரசியல் பிரமுகர்கள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்தபோராட்டத்தில் முன்னாள் பாராறுமன்ற உறுப்பினர்களான பா.அரியதேத்திரன்,சீ.யோகேஷ்வரன். ஞாஶ்ரீநேசன், கிழக்குமாகாணசபை முன்னாள் உறுப்பினர் இ.பிரசன்னா, தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன், தமிழ்தேசியமக்கள்முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஷ், பிரதேசசபை உறுப்பினர்களான குணசீலன், தேவன், மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அமைப்புன் தலைவர் திருமதி கலைவாணி, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வே. தவராசா மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மதகுருமார் என பலரும் கலந்து கொண்டனர்.