பொதுமக்கள் அரசாங்க ஊழியர்களின் எஜமானர்கள் -மட்டு.மாநகர ஆணையாளர்


பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம்பெறும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எஜமானர்கள் பொதுமக்கள்தான் என மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.

புதுவருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

காலை 9.00மணியில் உள்ள சுபவேளையில் நாடளாவிய ரீதியில் அலுவலகங்களில் கடமைகளை ஆரம்பித்தனர்.

உள்ளுராட்சிமன்றங்களிலும் அரச உத்தியோகத்தர்கள் இன்று தமது கடமைகளை ஆரம்பித்திருந்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபையில் அரச உத்தியோகத்தர்கள் புதுவருட கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு மாநகர ஆணையாளர் மா.தயாபரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,உயர் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள்,வேலைக்குழு ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தேசியக்கொடி,மாநகரசபை கொடிகள் ஏற்பட்டு தேசிய கீதம்,மாநகர கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 2021ஆண்டுக்கான அரச உத்தியோகத்தர்களின் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து மாநகர ஆணையாளர்,மாநகர முதல்வர் ஆகியோரின் சிறப்புரைகளும் நடைபெற்றன.