மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் ஆதங்கம்


இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் ஏனைய இன மக்களுக்கு ஒரு சட்டமா என மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு,மாதவனை பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இங்குள்ள மக்களும் இந்த நாட்டு மக்கள்தான் அவர்கள் வேற்றுக்கிரகத்தில் இருந்துவந்தவர்கள் இல்லையெனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா.சாணக்கியன் மற்றும் ஜனா என அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரம்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி உறுப்பினர்கள்,உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

இதன்போது மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.இதன்போது தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு கால்நடை பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

மூன்று தலைமுறையாக தாங்கள் இப்பகுதியில் கால்நடைகளை வளர்த்துவருவதாகவும் ஆனால் இன்று இப்பகுதியில் இருந்து வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களினால் வந்து விரட்டப்பட்டுள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு இந்த கால்நடைகள் மூலமே வாழ்வாதாரம் கிடைப்பதாகவும் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரம் இழந்த நிலையில் மிகுந்த கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் இதன்போது கால்நடை வளர்ப்போர் தெரிவித்தனர்.

நாளாந்தம் இப்பகுதியில் இருந்து ஆறாயிரம் லீற்றர் பால் பெறப்படுவதுடன் இலங்கையின் பால் உற்பத்தியில் கனிசமான பால் இங்கிருந்துசெல்லும் நிலையில் இதனை இல்லாமல்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படுவதாகவும் தினமும் மாடுகள் களவாடப்பட்டு கொண்டுசெல்லப்படுவதுடன் மாடுகள் கொல்லப்படும் சம்பவங்களும் நடைபெறுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது நிலைமைகள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் எந்தவிதமான சாதகமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் வேறு மாவட்டங்களில் இருந்து மக்களை கொண்டுவந்து மேய்ச்சல் தரைப்பகுதியில் இவ்வாறான அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் அதேநேரம் தமது நிலைமைகள் குறித்து கவனத்தில் கொள்ளவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் சார்பாக இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரச்சினையை தீர்த்து தருவோம் என்று வாக்குறுதிகள் மட்டுமே வழங்குவதாகவும் ஆனால் தமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்கவில்லையெனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சரிசமமாக பார்க்கவேண்டிய அரசாங்கம் இங்கு சிங்கள மக்களுக்கு ஒரு நியாயத்தினையும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயத்தினையும் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு சிறிய பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த அத்துமீறிய பயிர்ச்செய்கை இன்று அப்பகுதியில் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் தற்போது அபகரிக்கப்பட்டு மேய்ச்சல் தரை பகுதிகள் முழுமையாக அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் தமது தேவைக்கு ஒரு சிறிய கம்பினை வெட்டினால் ஓடிவந்து வழக்கு தாக்கல் செய்யும் வன இலாகா அதிகாரிகள் அப்பகுதியில் பாரிய காடழிப்பு செய்யப்படுவதை கண்டும் காணாமல் இருந்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அரச அதிகாரிகளும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காத நிலையே இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் அரசாங்க அதிபர்களாக இருந்தவர்கள் தமது பிரச்சினைகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தியபோதிலும் தற்போதைய அரசாங்க அதிபர் தாங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு நாங்க்ள மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கதைக்கின்றோம் என்று கூறியதும் தொலைபேசி இணைப்பினை துண்டித்துவிட்டு தொலைபேசியை நிறுத்திவைக்கும் நிலையே உள்ளதாகவும் இங்குள்ள பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.