தேர்தல் வந்தால் எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், விஜயகாந்த்களை பார்க்கமுடியும் -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்


தேர்தல் வந்தால் எம்.ஜி.ஆர்களையும் ரஜினிகாந்த்களையும் விஜயகாந்த்களையும் பார்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் மகளிர் மகாநாடு இன்று மாலை மட்டக்களப்பு பெரியபோரதீவில் நடைபெற்றது.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் மகளிர் மகாநாடு நடாத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவியின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் மகளிர் அணி உறுப்பினர்கள்,மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்தரன்,  

மக்களை மக்கள் தலைவர்கள் பிழையாக வழிநடத்தக்கூடாது. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது ஆன்றோர் வாக்காகும். மக்கள் தலைவர்கள் கால,சூழலுக்கு ஏற்றவாறு மக்களின் நலனை முதல்நிலைப்படுத்தி மக்களுக்கான வேலைத் திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க வேண்டும். 

இந்த மாகாணத்திலே 58.9வீதமாக இருந்த தமிழ் சமூகம் 38.6வீதத்திற்கு குறைந்திருக்கின்றது. இந்த மாகாணத்தில் நில ரீதியாக மத ரீதியாக பொருளாதார ரீதியாக கல்வி ரீதியாக பல வகையிலும் மற்றைய சமூகங்களோடு ஒப்பிடும்பொழுது நாங்கள் முன்னேற்றகரமான நிலையை அடையாத ஒரு சமூகமாகத்தான் இருக்கின்றோம். 

என்னைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பிற்கூடாக கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற எமது தமிழ் மக்களை மற்றைய சமூகங்களுக்கு இணையாக சமத்துவத்தை நாங்கள் உருவாக்க வேண்டும். 

கடந்த காலத்தில் இந்த மாகாணத்தில் 78.9வீதமாக இருந்த எமது சமூகம் 38.6வீதமாக குறைந்திருக்கின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இருந்திருந்தால் இந்த மாகாணம் இந்த மாகாணம் முஸ்லிம்களின் தாயகமாகியிருக்கும். 

நான் இனவாதத்தையோ மதவாதத்தையோ இங்கு பேச வரவில்லை. ஒரு இனத்தினுடைய சமூகத்தினுடைய தேவையான கொடுக்கப்படவேண்டிய உரிமைகள் பற்றி பேசுகின்றேன். இவ்வாறு பேசுகின்றபோது நான் இனவாதியாக சிலவேளை பிரதேசவாதியாக காட்டப்படலாம். நாம் இந்த நிலையில் நிற்கின்றோமென்றால் அதறற்குக் காரணம் இந்த மாகாணம் இந்த மாவட்டத்தின் மக்கள் எமக்களித்த வாக்குப் பிச்சையாகும். இந்த நிலைக்கு எம்மை கொண்டுவந்தவர்கள் நீங்கள். கொழும்பில் இருப்பவரோ காலியில் இருப்பவரோ அல்லது அம்பாந்தோட்டையில் இருப்பவரோ அல்லர்.இந்த மாவட்டத்தின் மக்களாவர். 

ஆகவே இந்த மாவட்டத்தின் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துகின்ற ஒரு பாரிய பொறுப்பு, தார்மீக கடமை எங்கள் தலைகளில் சுமத்தப்பட்டிருக்கின்றது. தாழ்த்தப்பட்ட ஒரு சமூகம்,சீரும் சிறப்புமாக விளங்கிய ஒரு சமூகம் கல்வியால் வளர்ந்து கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு சமூகம் இன்று இந்த மாகாணத்திலே ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகின்றபொழுது பின்தங்கிய நிலையிலே இருக்கின்றது. இந்த நிலையிலிருந்து எவ்வாறு எங்களுடைய தமிழ் சமூகத்தை மற்றைய சமூகங்களுக்கு இணையாக கொண்டுவர முடியும், அதற்கு என்ன திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றது.இந்த தமிழ் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சியை கொண்டுதான் திட்ட முன்மொழிவுகளும் இருக்கின்றது. எவ்வாறான அரசியலை நாம் முன்னெடுப்போம் என்றால் அதற்கு விடையில்லை. தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். அதற்கு என்ன தீர்வு? எங்களுக்கு நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு தேவை. அதனை அடைவதற்கு என்ன விடயங்களை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம்? மாறி மாறி அரசாங்கங்கள் வரலாம்.

கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு சம்பந்தன் உட்பட 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அதில் நானும் ஒருவனாக நான்கரை வருடங்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அரசாங்கத்தை பாதுகாத்தோம், வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களித்தோம், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வாக்களித்தோம்,அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வாக்களித்தோம். ஆனால் என்ன நடந்தது? தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுத்தோமா? உரிமையை பெற்றுக்கொடுத்தோமா? அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்தோமா? எதுவுமே இல்லை. ரணில் எங்களை ஏமாற்றிவிட்டார் என கடைசியாக சொன்னோம். 

நாங்கள் செய்யாத போராட்டங்களா? எத்தனை பேச்சுக்கள், எத்தனை போராட்டங்கள்.அரசாங்கத்திற்கு எதிராக கடந்த காலங்களில் பழைய அரசாங்கத்திலே நாங்கள் வலவு செலவுத் திட்டம் உட்பட ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வுகளிலும் காரசாரமாகத் திட்டி அதற்கு எதிராக பேசிவிட்டு அடுத்த கனமே அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்தான் நாங்கள்.

ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திற்கும் வாக்களிக்கின்றபொழுது இப்போது எங்களை நம்பி அரசாங்கமில்லை. வியாழேந்திரன் என்ற ஒருவரை நம்பி இந்த அரசாங்கமில்லை. வியாழேந்திரன் அவர்கள் பாராளுமன்றத்திலே அமைச்சராக இருக்கின்றார், அவர் அதைச் செய்யலாம் இதைச் செய்யலாம் என்று ஒருசிலர் சொல்லலாம். நிச்சயமாக நாங்கள் செய்ய வேண்டும். ஆனால் வியாழேந்திரன் என்ற தனி ஒருவரை நம்பி இந்த அரசாங்கமில்லை. காரணம் 156பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலம் பொருந்திய அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கின்றது. நாங்கள் நாளை வெளியேறினால் அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. 

எங்களுடைய மக்களின் பிரச்சினைகளுக்கான முடிந்தளவான தீர்வையும் அந்த மக்களுடைய அபிவிருத்தி சார்ந்த அரசியலையும் முடிந்தளவு நாங்கள் செய்து தருவோம் என்று தான் மூன்று இலட்சத்து ஆறாயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலே 33400 வரையான வாக்குகள் தான் மொத்தமாக எங்களுக்கு கிடைத்தது. இந்த இரண்டரை மாத காலத்திலே எமது அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள். வீடில்லை, கிணறில்லை, மலசலகூடமில்லை,வேலைவாய்ப்பில்லை,சுயதொழில் இல்லை,காணியில்லை என ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். இந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் போதாது. இந்த மாகாணத்திற்கு ஒரு அமைச்சர் போதாது. ஏனென்றால் எமது மக்களுக்கு முன்னால் தேவைகள் மலை போல் குவிந்து காணப்படுகின்றது. அவற்றை நாங்கள் செய்து கொடுக்க வேண்டும். 

மக்கள் எதிர்பார்க்கும் களஅரசியலை நாங்கள் கட்டமைக்கின்றோம். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கேட்டால் மக்கள் சொல்வார்கள். அதனை நாடிபிடித்துப் பார்த்து நிறைவேற்றிக் கொடுப்பவன்தான் மக்கள் தலைவனாக இருக்க முடியும். வெறுமனே மக்களுடைய பிரச்சினைகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தமிழ் மக்களின் கண்ணீரில் தமிழ் மக்களின் கல்லறைகளில் ஏறி நின்றுகொண்டு வீரவசனங்களை பேசலாம். 

இன்று அரசியல் கைதிகள் கைதிகளாக இருந்தால்தான் பல தமிழ் அரசியல்வாதிகளுக்கு அரசியலாகும். அரசியல் கைதிகள் வெளியே வந்துவிட்டால் அவர்களுக்கு அரசியலில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி,நியாயம் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு அரசியலில்லை.

விடுதலைப் போராட்டத்தை நான் அரசியலுக்கு வந்தகாலத்திலிருந்து இன்றுவரை ஒரு சொல்கூட கொச்சைப்படுத்தி பேசியதில்லை. ஏனென்றால் அது தமிழ் சமூகத்திற்கான போராட்டமாகும். ஆனால் விடுதலைப் போராட்டத்திலே எத்தனையோ பெறுமதியான உயிர்கள் இந்தப் பூமியிலே விதைக்கப்பட்டிருக்கின்றன. போராட்டத்திலே விதைக்கப்பட்ட ஒவ்வொரு போர் வீரனுடைய கனவு தமிழ் மக்களுக்கானது தமிழ் மக்கள் மற்றய சமூகங்களுக்கு நிகராக தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதாகும். அந்தக் கனவை நிறைவேற்ற யாரும் யோசிப்பதில்லை. அந்தக் கனவை நிறைவேற்ற எந்தத் திட்டத்தையும் கையில் எடுப்பதில்லை. ஆனால் அவர்களை வைத்து அரசியல் செய்கின்றனர். அவர்களின் குடும்பங்களுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களின் பிள்ளைகளுக்கு என்ன செய்தீர்கள்? எதுவுமில்லை. ஆனால் இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதில் தான் இருக்கின்றீர்கள்.அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதுதான் கஷ்டம். 

உங்களுக்கு பிரச்சினை வேண்டுமா அல்லது பிரச்சினைகளுக்கான தீர்வு வேண்டுமா? தீர்வுதான வேண்டும். எங்களுக்கு பிரச்சினை தான் வேண்டும் தீர்வு தேவையில்லை என யாரும் சொல்வதில்லை. எத்தனையோ பெண்கள் பிரச்சினைகளோடும் துன்பங்களோடும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் கணவனின் நிலை குறித்தும் குடும்பங்களின் வாழ்வாதாரம் குறித்தும் எத்தனையோ ஏக்கங்களோடு இந்த இடத்தில் வந்திருக்கின்றார்கள் என்பது அவர்களின் கண்களில் தெரிகின்றது. அதைவிடுத்து பிரச்சினை இருக்கின்றது என சொல்வது அனைவருக்கும் இலகுவாகிவிட்டது.அதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான சாதகமான வழிகளை நாங்கள் உருவாக்க வேண்டும்.

அசாத்தியமான விடயங்களை பேசிப்பேசி எங்களுடைய சமூகம் இன்னும் பல வருடங்கள் மற்றைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது கீழ்நிலைக்கு போவதற்கு நாங்கள் காரணகர்த்தாக்களாக அமைந்துவிடக்கூடாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் சமூகமாகிய நாங்கள் 75சதவீதம் இருக்கின்றோம். 25வீதமாக இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் பகுதிகளான காத்தான்குடி,ஓட்டமாவடி,ஏறாவூர் போன்ற பகுதிகளைப் பார்த்தால் சவூதி,கட்டார்,டுபாய் போன்று காட்சியளிக்கின்ற அதேவேளை எங்களுயை தமிழ் பகுதிகள் சோமாலியா போன்று காட்சியளிக்கின்றன. வடக்கு கிழக்கில் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்கள் இருக்கின்றன. அதில் 36ஆயிரம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றனர். எட்டாயிரம் மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர். வீட்டுக்கு வீடு கண்ணில்லாமல் கையில்லாமல் காலில்லாமல் உடலில் பல்வேறு காயங்களுடன் போராளிகள் இருக்கின்றனர். பலவலிகளை மார்பில் சுமந்துகொண்டிருக்கின்ற இந்த சமூகத்திற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? என்ன செய்திருக்கின்றோம்?

நேற்றைக்கு முன்தினம் நான் வேலைவாய்ப்பு பணியகத்திற்கு மத்தியகிழக்கு நாடுகளில் மறிபட்டுக்கிடக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொடர்பாக கதைப்பதற்கு சென்றபோது 53ஆயிரம் பேர் இலங்கைக்கு வரவிருப்பதாக சொன்னார். அவர்களை இங்கு கொண்டுவர வேண்டும். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அதற்கான இடங்கள் வேண்டும். இங்கு வந்தால் அவர்களுக்கு தொழில் என்ன? அவர்களின் குடும்பங்களின் நிலை என்ன? யதார்த்தத்தை யாரும் பேசுவதில்லை. 

தேர்தல் வந்தால் எம்.ஜி.ஆர்களையும் ரஜினிகாந்த்களையும் விஜயகாந்த்களையும் பார்க்க முடியும். அப்படிப் பேசுவார்கள். நாமும் உணர்ச்சிவசப்பட்டு ஏறிவிடுவோம். தேர்தல் முடிந்து இரண்டு நாட்களின் பின்னரே எமக்குத் தெரியும் நாம் ஏறியது பப்பாசி மரத்தில் என்பது. அதற்குப் பின்னர் ஐந்தாண்டுகளுக்கு ஒன்றும் செய்கின்றார்களில்லை,எதற்கு வாக்களித்தோமோ தெரியாது, வரட்டும் அடுத்த தேர்தலுக்கு என இதைத்தான் நமக்கு சொல்லத் தெரியும்.  எப்படிப் பெசினால் உங்களை ஏமாற்ற முடியும், எப்படிப் பேசினால் உங்கள் வாக்குகளை பெற முடியும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.