வெல்லாவெளி,களுவாஞ்சிகுடியில் அடையாளம் காணப்பட்ட கொரனா தொற்றாளர்


(ரஞ்சன்)

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிஸ் நிலையம் தற்காலிமாக மக்கள் சேவைக்கு மூடப்பட்டதுடன் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று அவருக்கு கொரனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் கரடியனாறு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தங்கியிருந்து சிகிச்சைபெற்ற விடுதி மூடப்பட்டதுடன் அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மற்றும் ஊழியாகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம் மூடப்பட்டு அங்கிருந்தவர்கள் மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக்கல்லூரிக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் தொற்றும் நீக்கும் செயற்பாடுகள் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேவேளை மட்டக்களப்பு வெல்லாவெளி பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட  கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்ட   10 நபர்களுக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒரு நபருக்கு கொரோனா  தொற்று இருப்பதாக இன்று 06-12-2020ம் திகதி  உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

வெல்லாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பிலாலி வேம்பு விநாயகர் வீதி எனுமிடத்தில் உள்ள இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடையவர்  இனம் காணப்பட்டுள்ளார்.

இவர் 27-11-2020  திகதி கொழும்புக்குப் போய் 02-12-2020  வீட்டுக்கு வந்தவர் அவரை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போதும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர் தனிமைப்படுத்தப்பட்ட போதும் வயல் வேலைக்கு சென்றதாகவும் அவருடைய வீட்டில் உள்ளவர்கள் அயல் வீட்டுக்காரர் பிள்ளைகளுடன் பாடசாலைக்கு சென்றதாகவும் பல இடங்களுக்குச் சென்று வந்ததாகவும்  அப்பகுதி மக்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் தெரிவித்துள்னர்.

அவர் சென்றது இடங்களெல்லாம் வெல்லாவெளி பிரதேசத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் இனங்காணும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். 

அவ்வாறு இனங்காணப்பட்டவர்களை வீடுகளில்  வெல்லாவெளி பொது சுகாதார பரிசோதகர்களினால் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.