மட்டக்களப்பு நகரினை ஆக்கிரமிக்கும் கொரனா – மாநகர முதல்வர் அவசர ஊடக சந்திப்ப


மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் அன்டிஜன் பரிசோதனையில் 18பேர் கொரனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் எட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் கொரனா தொற்றாளர்களின் எண்ணிகையை தொடர்ந்து இன்று காலை முதல் மட்டக்ளப்பு காந்திபூங்காவில் மட்டக்களப்பு நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அன்டிஜன்; பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன் தலைமையில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது 350பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 18பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் குறித்த 18பேரும் கடமையாற்றிய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

நகரின் ஒரு பகுதியிலேயே இந்த அன்டிஜன் பரிசோதனைகள் நடாத்தப்பட்ட நிலையில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்படும்போது இன்னும் பலர் இனங்காணப்படலாம் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த வர்த்தக நிலையங்களுக்கு சென்றவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்;டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மாநகரினை தனிமைப்படுத்தி பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தரப்புடன் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத வர்த்தக நிலையங்களை மூடிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் சரவணபவன்,

மட்டக்களப்பு மாநகரத்திற்குள் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.350பேர் அன்டிஜன் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் 18பேர் தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இது பாரிய தாக்கத்தினை மட்டக்களப்பு நகர் மக்களுக்கு செலுத்தியுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்பதுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கடமைகளை முன்னெடுக்கவேண்டும்.

கொரனா தொற்று அடையாளம் காணப்பட்ட வர்த்தக நிலையங்களை மூடிவிடவும் அங்குவந்துசென்ற பொதுமக்களின் விபரங்களை திரட்டி அவர்களையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார திணைக்களம் முன்னெடுத்துவருகின்றது.இது தொடர்பில் மதஸ்தலங்கள் ஊடாகவும் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று பண்டிகைகாலத்தில் தேவாலயங்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படவேண்டும் என்பதுடன் குறிக்கப்பட்ட எண்ணிகையினர் மாத்திரமே அனுமதிக்கப்படவேண்டும்.இதனை உதாசீனம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.தவிர்க்கமுடியாத காரணத்தினால் இவ்வாறான வேண்டுகோளை நாங்கள் விடுக்கின்றோம்.

எந்த பகுதிகளில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுகின்றதோ அந்த இடத்திலேயே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மாநகரசபையின் கொரனா செயலணி இந்த விடயத்தில் தீவிரமாக செயற்படும்.

பொதுமக்கள் மிக அவசியம் ஏற்படும்பட்சத்தில் மட்டும் வெளியில் வாருங்கள்.பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.

18 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட 08 வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அங்குவந்துசென்றவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடனும் கலந்துரையாடி மட்டக்களப்பு மாநகரத்தினை தனிமைப்படுத்துவதா என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும்.

வெளியிடங்களில் இருந்துவருவோர் வருகையினை கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும்.இங்குவந்து தொற்றினை ஏற்படுத்தாமல் வரும்போது அப்பகுதியில் பரிசோதனை செய்த அறிக்கையுடன் வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.